நியாயத்திற்கு குறுக்கே விசுவாசம் வரும் போது நடக்கும் இழப்புகள் பற்றிய கதையே `கருடன்’
தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த, ஆதி (சசிக்குமார்) கருணா (உன்னி முகுந்தன்) இருவரும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியைப் போலவே சிறுவயதில் கருணாவுக்கு கிடைக்கும் இன்னொரு உறவு சொக்கன் (சூரி). ஆதரவில்லாத தனக்கு கருணா அடைக்கலம் கொடுத்ததால், உயிரையே கொடுக்கும் அளவு சொக்கனுக்கு விஸ்வாசம் உருவாகிறது. ஊரிலிருக்கும் கோம்பை அம்மன் கோவிலின் நிர்வாகத் தலைவர் கருணாவின் அப்பத்தா (வடிவுக்கரசி). கூடவே கோவில் நிர்வாகத்தில் ஆதி, கருணாவும் சம்பந்தப்பட்டவர்கள். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் தங்கபாண்டியன் (ஆர்.வி.உதயகுமார்) சென்னையில் இருக்கும் ஒரு முக்கிய இடத்தை வளைத்து போட திட்டமிடுகிறார். ஆனால் அந்த நிலம் கோம்பை அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. அதை அபகரிக்க அமைச்சர் போடும் திட்டங்கள் என்ன? இதனால் ஆதி, கருணா, சொக்கன் வாழ்வில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? சொக்கன் தன்னுடைய விசுவாசத்திற்காக கொடுக்கும் விலை என்ன? இவை எல்லாம் சேர்ந்ததே `கருடன்’.
படத்தில் முதல் ப்ளஸ் படம் எழுதப்பட்டிருக்கும் விதம். மிக கனமான கதையை, கொஞ்சம் ஹூமர் கலந்து கொடுத்திருக்கிறார் துரை செந்தில்குமார். மூன்று சரிசம முக்கியத்துவமுள்ள பாத்திரங்கள், அவற்றின் மனநிலையை அழுத்தமாக பதிவு செய்து அறிமுகப்படுத்திய உடனே படத்தின் மீது நம் கவனம் குவிகிறது. கதையின் நரேட்டர், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சண்டைக்கு பின்னாலும் மூன்றே காரணங்கள் தான் உண்டு, மண் - பெண் - பொன் எனக் கதையை துவங்குவதும், இம்மூன்றும் கதையின் மைய பிரச்சனைகளாக எப்படி ஆகிறது என கதை நகர்வதும் தரம். மூன்று பிரதான கதாப்பாத்திரங்களும், இம்மூன்று காரணிகளுள் ஒவ்வொன்றுடன் சம்பந்தப்படுவது கூடுதல் கவனம் பெறுகிறது. நடிப்பு பொருத்தவரை சூரி, ஒரு நடிகனாக இன்னும் ஒரு படி மெருகேறியிருக்கிறார். சகஜமாக பேசுவது, காதலியுடன் மெல்லிய நகைச்சுவையுடன் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் கனமான நடிப்பு என ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். சசிக்குமார் வழக்கம் போல இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார், அது அந்தக் கதாப்பாத்திரத்தின் நம்பகத்தன்மையை வலுபடுத்துகிறது. ஷிவதாவுக்கு சிறப்பாக நடிக்க இரண்டு இடங்கள் இருக்கிறது, அதை கொஞ்சமும் வீணடிக்காமல், அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், அந்தக் காட்சி நம்மை கண்கலங்க செய்யும். சொக்கனின் காதலி கதாப்பாத்திரம் வின்னரசியாக வரும் ரேவதி ஷர்மா நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படி அமைந்திருந்தது. பேராசைப்படும் அரசியல்வாதி பாத்திரம் ஆர்.வி.உதயகுமாருக்கு. அலட்டிக் கொள்ளாமல் பேச்சிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார்.
முன்பே சென்னது போல படத்தின் ரைட்டிங் சிறப்பாக இருந்தது படத்திற்கு பல முக்கியமான இடங்களில் உதவி இருக்கிறது. எங்கெல்லாம் நியாயமா விசுவாசமா என்ற கேள்வி எழும் இடங்களில் பார்வையாளர்களுக்கே ஒரு பதற்றம் ஏற்படக் காரணமும் அது கச்சிதமாக எழுதப்பட்டிருப்பதுதான். இடைவேளைக் காட்சி அமைக்கப்பட்டிருந்த விதமும், அங்கு நடப்பதும் கூஸ்பம்ப்ஸ் சம்பவம். படத்தின் இன்னொரு முக்கியமான தூண் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. படத்தின் பல அடர்த்தியான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார் யுவன். பாடல்கள் மோசம் இல்லை என்றாலும், மனதில் பதிவும் அளவுக்கும் இல்லை என்பது சோகம். அந்த மண்ணின் குளுமையையும், செங்கற்சூலையின் புழுதியையும் திரையில் பரப்புகிறது ஆர்த்தர் வில்சனின் கேமரா.
வழக்கமான காட்சிகளோ, க்ளிஷேவான விஷயங்களோ படத்தில் வந்துவிடக்கூடாது என உறுதியாய் உழைத்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். ஆனால் படத்தின் எதிர்மறை பாத்திரங்களை அவர் காட்டியிருக்கும் விதத்தில் மட்டும் சறுக்கியிருக்கிறார். ஒரு கதாப்பாத்திரத்தின் உண்மை முகம் தெரியும் போது அது செய்யும் விஷயங்கள், மைம் கோபியின் மிக வழக்கமான வில்லன் சித்தரிப்பு இவை சற்று அயற்சியைத் தருகிறது. ஆதி, கருணா, சொக்கன் கதை சமுத்திரக்கனி வழியாக சொல்லப்பட்டாலும், அவரின் கதாப்பாத்திரம் இப்படத்திற்குள் என்ன செய்கிறது என்பதில் இன்னும் கொஞ்சம் ஆழம் சேர்த்திருக்கலாம். ஒருவகையில் இக்கதை, யாரோ சுயலாபத்துக்காக செய்யும் விஷயம், ரிப்பில் எஃப்க்ட் போல எப்படி சிலரது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான். அக்கோணத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொண்டு வந்திருக்கலாம். அடுத்து, இப்படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கானது அல்ல. படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறையும், சிதைந்த உடல்கள் அடங்கிய காட்சிகளையும் உள்ளடக்கியது. அதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
மொத்தத்தில் பரபரப்பாக நகரும், சுவாரஸ்யமான காட்சி அமைப்பு, அழுத்தமான நடிப்பு, அசுரத்தனமான பின்னணி இசை போன்றவற்றால், படத்தின் சில குறைகளையும் மறந்து நம்மால் பார்த்து ரசிக்க முடிகிற படைப்பு தான் கருடன்.