Thenmerku Paruvakaatru kalaiselvi character PT web
திரை விமர்சனம்

கை கூடாத ஆசை.. தென்மேற்குப் பருவக்காற்று ‘கலைச்செல்வி’.. சீனு ராமசாமியின் அற்புதமான பாத்திர படைப்பு!

Rajakannan K

கள்ளிக்காட்டின் தேவதை இந்த கலைச்செல்வி!

சொல்வொண்ணா ஆனந்தம்.. ஆட்டுப்பட்டியில் கதவு திறக்கப்பட்ட உடன் துள்ளி குதித்து ஓடும் ஆட்டுக் குட்டியைப் போல் இன்பக் கனவுகள் மிதக்க ஆடுகளுக்கு மத்தியில் இருந்து பாய்ந்து ஓடி வருவாள் கலைச்செல்வி. கள்ளிக்காட்டின் தேவதையாக சிறகு முளைத்ததுபோல் வீட்டை நோக்கி அவள் பறந்து ஓடினாள்.. கால்கள் நிச்சயம் தரையில் இல்லை.. காற்றில் மிதந்து ஓடோடி வந்தாள் கலைச்செல்வி. பின்னணியில் என்.ஆர்.ரகுநந்தன் அப்படியொரு மெய்சிலிர்க்க வைக்கும் இசையை ஒலிக்கவிட்டிருப்பார். அந்த இசை நம்மையும் ஆனந்த உற்சாகத்திற்கு அழைத்துச் செல்லும். கையில் தொரட்டியுடன் மேல் சட்டையும், பாவாடையுமாக அவள் ஓடி வரும் அழகே தனிதான். ஓடி வந்து தொரட்டியை வீட்டின் முன்பு எறிந்துவிட்டு கதவருகே அவள் வந்து நிற்கும் போது முகமெல்லாம் வெக்கம் அப்பியிருக்கும். கல்யாண நினைப்பு என்றால் சும்மாவா என்ன.. ஆம், தன்னுடைய தூரத்து உறவு அத்தை ஒருத்தி தன்னுடைய மகனுக்காக அவளை பெண் கேட்டு வந்திருக்கிறாள். அந்த செய்தி கேட்டு தான் இப்படி சிட்டாக பறந்துவந்தாள். சிறு வயதில் பார்த்தவன் தான். ஆனால், இப்பொழுது எப்படி இருப்பான் என்று தெரியாது.

ஆசையாக அத்தையின் அருகில் வெட்கத்தோடு உட்காருவாள் கலைச்செல்வி. அந்த முகத்தை பார்க்கணுமே அப்படியொரு இன்பக்கலை. தன்னைப்பற்றி பெருமைபட தன்னுடைய அப்பா சொல்ல சொல்ல முகம் மலர கேட்டுக் கொண்டிருப்பாள் வெட்கத்தோடு. கல்யாணத்தையொட்டி தன்னுடைய தந்தையிடம் அந்த அத்தை பணம் கொஞ்சம் எதிர்பார்ப்பதை தயக்கத்துடன் சொல்லிக் கொண்டிருப்பாள்.

இதை கேட்ட உடனேயே தன்னுடைய உண்டியல் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து, “அத்த இதுல ரெண்டாயிரம் ரூபா சேர்த்து வச்சிருக்கேன். பத்தலனா இதையும் வச்சிக்கோங்க..” என்று ஆசையோடு சொல்வாள். கல்யாணத்திற்கு தனக்கு அவ்வளவு ஆசை என்பதை வெளிப்படுத்தி இருப்பாள். 6 மாசத்துல கல்யாணத்தை முடிப்போம் என அத்தை வீராயி சொன்னதும் அவள் முகம் முழுவதும் புன்னகை தவழும்.

அத்தோடு அடுத்துதான் இன்ப அதிர்ச்சி அவளுக்கு கிடைத்தது. தான் கையோடு கொண்டு வந்த மகனின் புகைப்படத்தை கொடுப்பாள் வீராயி. தன்னுடைய போட்டோவை அவள் கொடுக்கும் போதும் மீண்டும் பின்னணி இசையில் ரகுநந்தன் பட்டையை கிளப்பி இருப்பார். முதலில் வேண்டும் என்றே தன்னுடைய குழந்தை பருவ போட்டோவை கொடுத்து பின்னர் மீண்டும் சமீபத்திய போட்டோவை கொடுப்பாள். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முன்னணி கதாபாத்திரமான பேச்சிக்கு முன்பாக அறிமுகமாகும் கதாபாத்திரம் தான் கலைச்செல்வி. ஆம், கிட்டதட்ட ஒரு ஹீரோயின் அறிமுகம் போலவே இருக்கும். கலைச்செல்வி கதாபாத்திரத்தை அவ்வளவு அருமையாக படைத்து இருப்பார் இயக்குநர் சீனு ராமசாமி. அவருக்கு இன்று பிறந்தநாள்.

தமிழ் நிலத்தின் ஐந்தினைகளே சீனு ராமசாமியின் கதைக்களம்!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களின் பட்டியலில் நிச்சயம் இவருக்கு முன்னணி இடம் உண்டு. தமிழ் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தினை களாக பிரித்து பார்ப்பது வழக்கம். இப்படியான நிலங்களின் தன்மையில் தான் தன்னுடைய படங்களின் களங்களையும் படைத்து வருகிறார் சீனு ராமசாமி. குறிஞ்சியும், முல்லையும் திரிந்து கெடும் போது தான் பாலை நிலம் உருவாகும். பாலை என தனி நிலம் கிடையாது. அப்படியாக மருதமும், பாலையும் அருகருகே காணப்படும் தேனியின் ஒரு பகுதியில் தான் தென்மேற்கு பருவக்காற்று கதைக்களம் அமைக்கப்படும். அதாவது ஓரளவு விளைச்சலுக்கு உகுந்த மழை வாய்ப்பு கொண்ட நிலமும், அதன் அருகேயே மழைக்கு வாய்ப்பு இல்லாத வறண்ட பூமியும் இருக்கும் இடத்தில் இரு இதயங்களுக்கு இடையே பூத்த காதல் தான் இந்த தென்மேற்கு பருவக்காற்று.

தென்மேற்கு பருவக்காற்றில் நாயகன் விஜய் சேதுபதியின் முருகையன் கதாபாத்திரத்தை விடவும், சரண்யா பொன்வண்ணன் ஏற்று நடித்த வீராயி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது. நாயகன் முருகையா, நாயகி பேச்சி என எல்லா கதாபாத்திரங்களும் பேசப்பட்டாலும், அதிகம் பேசப்படாமல் ஆனால் குறைவில்லா தாக்கத்தை கொடுத்த கதாபாத்திரம் தான் கலைச்செல்வி. சீனு ராமசாமியின் இந்த பாத்திரப்படைப்பு பற்றியும் பூ படத்தின் மாரி மற்றும் தர்மதுரையின் அன்புச்செல்வி பாத்திரத்துடன் ஆன சிறு ஒப்பீடும் தான் இங்கே நாம் பார்க்கவிருப்பது.

சில காட்சிகள் தான்.. ஆனாலும் கலைச்செல்வி பாத்திரப்படைப்பு தனிச் சிறப்பானது!

மொத்தமே படத்தில் நான்கு காட்சிகள் தான். அதில் கடைசி காட்சியில் வசனம் கிடையாது. அழும் காட்சி மட்டுமே. மூன்று காட்சியில் மட்டுமே வசனங்கள் இருக்கும். மூன்றுமே முத்தான காட்சிகள். நாம் மேலே பார்த்தது படத்தின் கலைச்செல்வி வரும் முதல் காட்சி. கலைச்செல்வி கதாபாத்திரம் அச்சு அசலாக நம் கிராமங்களில் இருக்கும் மண் சார்ந்த தூய உள்ளம் கொண்ட ஒரு இளம் பெண் தான். கல்யாணம் என்றாலே எந்த இளம் சிட்டுக்கும் மனசில் ஆவல் இருக்கவே செய்யும். வீராயி படத்தை கொடுத்த உடனேயே அவனையே தன்னுடைய கணவனாக நினைத்துக் கொள்கிறார். பின்னாளில் முருகையா (விஜய் சேதுபதி) அவள் வீட்டிற்கு வரும் போது அவள் புகைப்படத்துடன் அவன் புகைப்படமும் அருகில் இருப்பதை காண்பான். அது அவள் எவ்வளவு அன்பும், ஆசையும் இவன் மேல் வைத்திருக்கிறாள் என்பதை உணர்த்தும்.

அப்பொழுது தன் மனதில் வேறொரு பெண் இருக்கிறாள் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கலைச்செல்வியை பார்த்து சொல்லவே வந்திருப்பான் முருகையா. ஆனால், அவள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது இந்த கல்யாணத்தை அவள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்வான். ஆனால், எதுவும் சொல்ல முடியாமல் தவிப்பான். அதனால், நேருக்கு நேராக அவளிடம் சொல்லி மனதை நோகடிக்க வேண்டாம் என எண்ணி வீட்டில் இருந்து கிளம்ப எத்தனிப்பான். அப்பொழுது, கலைச்செல்வி அவனிடம் சில வார்த்தைகள் பேசுவாள். அது இன்னும் அவனுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

ஆம், “அத்த வந்துச்சு.. அம்பதாயிரம் கல்யாண செலவுக்கு சேர்த்து கேட்டுச்சு.. நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க.. கடன உடன வாங்கி கல்யாணத்த நடத்துங்க. நா காட்டு வேலைக்குலா போவேன். அப்டி போயி எப்டியாவது கடன அடைச்சிடுறேன். மனசுல எதையும் வச்சிக்காதீங்க. நா பாத்துக்கிறேன்” என்று முகம் முழுக்க வெக்கம் ததும்ப தன்னுடைய விருப்பத்தை கொட்டித் தீர்ப்பாள். அதில் கல்யாணம் எக்காரணத்தை கொண்டும் நின்றுவிடக் கூடாது என்ற நினைப்பும் கூடவே இருக்கும். அவளுக்கு பெரிய இடி காத்திருக்கிறது என்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

அவளின் வேதனைகளை காட்சிப்படுத்தி இருக்கலாம் இயக்குநரே!

அவனோ அவளது தந்தையிடம் எப்படியோ சொல்லிச் செல்ல எல்லாமே அவளுக்கு பின்னாள் தெரிய வருகிறது. அவளது தந்தை வீராயி வீட்டிற்கு சென்று கோபத்தை கொட்டித் தீர்ப்பான். ஆனால், அவளால் ஏதும் சொல்ல முடியாத நிலை. ஆசையை வளர்த்துக் கொண்டாள். ஆனால் அது அப்பொழுது நிராசையாக மாறிவிட்டது. அவள் எப்படியெல்லாம் அதனை கேட்டு வேதனைப்பட்டு இருப்பாள். இயக்குநர் அதையெல்லாம் காட்சிப்படுத்தவில்லை என்பது சற்றே வருத்தம் தான். ஆனாலும், அடுத்து மிகவும் பக்குவமாக கலைச்செல்வியின் கதாபாத்திரத்தை நிறைவு செய்து இருப்பார். உண்மையில் நம் கண்களை கலங்க வைக்கும் காட்சி அது. தன்னுடைய ஆசை கை கூடவில்லை என்று தெரிந்தபின்னும், தந்தை அவசரமாக ஏற்பாடு செய்த திருமணத்திற்கு விருப்பமே இல்லாமல் இசைவு கொடுத்து இருப்பாள். பின்னர், தான் விருப்பப்பட்ட பெண்ணிற்கு அவன் போராடுவதையும் கேள்விப்பட்டு இருப்பாள். இப்பொழுது மீண்டும் அவனை சந்திக்க வருவாள் கலைச்செல்வி. இந்த காட்சியை விவரிக்க வார்த்தையே இல்லை. தன் ஆசை நிராசை ஆனதை எல்லாம் மறைத்துக் கொண்டு, தன் தந்தை வீடேறி சென்று திட்டிவிட்டார் என்பதற்கு வருத்தத்தை தெரிவிப்பாள்.

ஆம், “நீங்க ஏன் தூரத்து சொந்தம். உங்கள சின்ன வயசுல நான் பாத்தது. சொந்தம் சேரட்டும்னு தான் அப்பா நெனச்சுது. அப்பா வஞ்சத தப்பா நினைச்சுக்காதீங்க. மண்ண வாரி தூத்திட்டத நெனச்சு ராத்திரியெல்லாம் தூங்காம அழுதுட்டே கெடந்துச்சு. உங்க சூழ்நில அப்பிடி. நீங்க என்ன செய்வீங்க பாவம்” என்று அவள் சொல்லும் வார்த்தைகள் அப்படி இருக்கும்.

அத்தோடு நில்லாமல் அவனுக்கே, “யார் யாருக்குனு யாருக்கு தெரியும். நீங்க எதுவும் கவலப்படாதீங்க மாமா. நீங்க மனசுல நெனச்ச வாழ்க்க உங்களுக்கு அமையும்” என்று ஆறுதல் சொல்வாள். கடைசியாக அவள் சொல்வது தான் நம் மனதை ஒரு நிமிடம் சில்லிட வைத்துவிடும். “அவசர அவசரனா எனக்கு வேற எடத்துல பேசி முடிச்சிட்டாங்க. நீங்க ஏன் கல்யாணத்துக்கு வருவீங்களானு எனக்கு தெரியாது. இதுல உங்க போட்டோ இருக்கு. இனிமே இது எங்கிட்ட இருக்கக் கூடாது. அதான் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன். நான் கும்புடுற தெய்வம் உங்கள கைவிடாது மாமா” என்று அவள் சொல்வாள். அந்த இடத்தில் தான் கலைச்செல்வியின் கதாபாத்திரம் நம்முடைய மனதில் நின்றுவிடுகிறது.

பூ மாரியும்.. தென்மேற்குபருவக்காற்று கலைச்செல்வியும்..

கிட்டத்தட்ட இது பூ படத்தில் வரும் மாரியின் கதாபாத்திரம் போன்றது. மாரிக்கு தன்னுடைய முறை மாமனை திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டு வேறொரு வாழ்க்கைக்கு தயாராகிறாள். மாரி எவ்வளவு ஆசை தன் மாமன் மேல் வைத்திருந்தாள் என்பதுதான் கலைச்செல்வியின் நிலை. மாரி வாழ்க்கை பெரிது. இவளது கனவு சில காலம்.. அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால், ஒருவனை மனதில் நினைத்துவிட்டால் அந்தப் பெண் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டாள். வாழ்நாள் முடியும் வரை கூட.

அதேபோல், தர்மதுரை படத்தில் வரும் அன்புச்செல்வியின் கதாபாத்திரத்தோடும் சிறிய அளவில் ஒப்பீடு செய்யலாம். தர்மதுரையை திருமணம் செய்யப் போகிறோம் என்ற ஆசையோடு வலம் வருகிறாள் அன்புச்செல்வி. ஆனால், வரதட்சணை என்ற சீரழிவு அவள் வாழ்க்கையில் விளையாடி திருமணமே இல்லை என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. அவளோ தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள். அன்புச்செல்வியின் ஆசை நிராசையாக ஆகிவிடுகிறது. அதேபோல் தான் கலைச்செல்வியின் ஆசையும்.

ஏன் இவ்வளவு அழுத்தமாக கலைச்செல்வி கதாபாத்திரம் பேச வேண்டியிருக்கிறது என்றால் மூன்றே காட்சிகளில் அவள் காட்டிய முக பாவங்கள் தான். எல்லாமே அந்த முகத்தில் மிக துள்ளியமாக இருக்கும்.

கலைச்செல்வி மீது இயக்குநர் கருணை காட்டி இருக்கலாம்!

இயக்குநருக்கு ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, பேச்சியை பார்ப்பதற்கு முன்பே கலைச்செல்வியை அவனது தாய் மணமுடிக்க வாக்கு கொடுத்துவிடுகிறாள். ஆனால், அப்பொழுது முருகையன் திருமணத்தை மறுக்க நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. அவன் சொல்லும் காரணங்கள் ஓரளவுக்குதான் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஒருவேளை அதற்கு முன்பே பேச்சியை பார்த்து இருந்து சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. கலைச்செல்வியின் ஆசை நிராசையான வருத்தத்தில் தான் இந்த வார்த்தைகளை கேட்க தோன்றுகிறது. மற்றபடி தென்மேற்கு பருவக்காற்று கதைக்களமும் அதில் கலைச்செல்வி பாத்திரப்படைப்பும் மிகவும் நேர்த்தியானது. துளியும் போலித்தன்மை இல்லாத மண்ணின் அசல் பெண் தான் கலைச்செல்வி. ஏன் பேச்சி பாத்திரத்தைவிடவும் கூட. பேச்சியில் கூட சிறு அளவு சினிமாத்தனம் இருக்கும். ஆனால், கலைச்செல்வி கதாபாத்திரம் கிராமங்களில் உலாவும் நூறு சதவீதம் யதார்த்த சாயல் கொண்ட பெண்ணே.

தர்மதுரையின் அன்புச்செல்வியைப் போன்றே தென்மேற்கு பருவக்காற்று ‘கலைச்செல்வி’ சீனு ராமசாமியின் அற்புதமான பாத்திர படைப்பு என்பதில் சந்தேகமில்லை. அநேகமாக இயக்குநர் சீனு ராமசாமிக்கு செல்வி என்பது நெருக்கமான பெயராக இருக்கக் கூடும். முதல் படமான கூடல் நகரிலும் ஒரு தமிழ்செல்வி வருவாள். தமிழ் மண்ணின் செல்விகளின் ஆசைகள் எதிர்காலத்திலாவது எந்தவித சிக்கலும் இல்லாமல் கைகூட வேண்டும்.