DEVARA JUNIOR NTR DEVARA
திரை விமர்சனம்

DEVARA Part 1 REVIEW | KORTALA சிவா முதுகுல தான் மொதல்ல கோடு போடணும்... தேவாரா ஒரு அனுபவம்..!

பாகுபலியையும் , KGFஐயும் பார்த்து இன்னும் எத்தனை படங்கள் எடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. உண்மையில் மீண்டும் மீண்டும் அதே எண்ணெயில் பஜ்ஜி போடும் கதாசிரியர்கள் முதுகில் தான் தேவாரா கோடு போட வேண்டும்.

karthi Kg

தன் மக்கள் அறத்தின் பக்கம் நிற்காமல் தவறான வழியில் ஈடுபட்டால், கடல் வழி வந்து தண்டிக்கும் தேவாரா யார் என்பதே இந்த DEVARA முதல் பாகத்தின் ஒன்லைன்.

காவல்துறைக்கு கடல் வழி கடத்தல் செய்யும் ஒரு நபர் தேவைப்படுகிறது. யாரோ இருவரைப் பற்றி பேசுகிறார்கள். அல்லது அப்படித்தான் ஏதோ சொல்ல வருகிறார்கள். உண்மையில் இந்த ஆரம்பத்தைப் பற்றி படக்குழுவே கவலைப்படாத போது நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில், முதல் பத்து நிமிடத்தை மொத்தமாய் மறந்துவிட்டு வேறு ஏதோ கதையைத்தான் நமக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஜஸ்டீஸ் லீகில் BATMAN AQUAMANஐ தேடும் காட்சிகளை நினைவலைகளில் ஓட்டிக்கொள்ளவும். ' இந்த ஏரியாவுல ஒரு பெத்த கை இருக்கு சார்' என யாரோ கைகாட்ட, சைஃப் அலி கான் நோக்கி காவல்துறை வருகிறது. அவரோ, ' வேணாம் பிலிப்ஸே' என பொடணியில் அடித்து திருப்பி அனுப்பிவிடுகிறார். பிறகு முதல் மரியாதை ராதா விட்டுச் சென்ற ஒரு ஓடத்தில் ஏறி பிரகாஷ் ராஜிடம் ஒரு அதிகாரி உதவி கேட்கிறார். ' வாய்ஸ் ஓவர்ல கதை சொல்லவே பிறந்தவண்டா இந்த ஸ்நேக் பாபு' கதையாக இதோ சொல்கிறேன் என தேவாரா புராணத்தை ஆரம்பிக்கிறார் பிரகாஷ் ராஜ். ' RED SEA' க்கு அருகே ஒதுக்குப் புறமாக நான்கு இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த குழுக்களின் தலைவர் தேவாரா என்னும் ஜூனியர் NTR. ' BLACK PANTHER' ஐ நினைவு வைத்துக் கொள்ளுங்கள். அந்த நான்கு இனக்குழுக்களிடம் அசாகய சக்திகள் இருக்கின்றன. தெலுங்கு சினிமா ஹீரோக்களுக்கு இயல்பாகவே இருக்கும் சக்திகள் தான் இவை என்றாலும், இந்தப் படத்தில் கொஞ்சம் எக்ஸ்டிரா. கப்பலில் இருக்கும் பொருட்களை கடத்திக் கொண்டுவந்து கமிஷன் வாங்குவதே இவர்களின் தலையாய பணி. இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் நேர்மை தவறாத அதிகாரி நரேனிடம் ஒட்டுமொத்த கும்பலும் மாட்டிக்கொள்கிறது. "நீங்க கடத்தறது போண்டா, பக்கோடா இல்லைடா வெடிகுண்டு" என்னும் அறிய வகை உண்மையை அந்த கூட்டத்துக்கு புரிய வைக்க முயல்கிறார் நரேன். எங்க அறிவுக்கண்ண தொறந்ததுக்கு தாங்க்ஸ் என அந்த நொடியே திருந்திவிடுகிறார் தேவாரா. ஆனாலும் மற்ற குழுக்கள் எல்லாம் , 'அவன் கெடக்கறான்' என கடலுக்குள் இறங்க, ' கோதாவரி கோட்டக் கிழிடீ' என எல்லோர் முதுகிலும் கத்தியால் X போட்டுவிடுகிறார். இப்படியான தேவராவை பழி வாங்கினாரா சைஃப் அலிகான்; தேவராவின் மகன் வராவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை; பிரகாஷ் ராஜிடம் இன்னும் என்ன என்ன கதையெல்லாம் மீதம் இருக்கின்றன என்பதையெல்லாம் நம்மை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறது இந்த தேவாரா பார்ட் ஒன்.

தேவாராவாக ஜூனியர் NTR. அவரின் மகன் வராவாக மீண்டும் ஜூனியர் NTR. ' தமிழ்ப்படத்தில்' வரும் சிவாவுக்கு அடுத்தபடியாக இரு கதாபாத்திரங்களுக்கும் வேரியஷன் காட்டி மிரட்டியிருக்கிறார் ஜூனியர் NTR. சுருள் முடி வச்சா அப்பா, சாதா முடி வச்சிருந்தா மகன் . அப்பா மகன் டபுள் ஆக்ட் இவ்வளவு ஈஸியாக இருக்கிறதே..! குட்டி ஜூனியர் NTRக்கு ஜோடி ஜான்வி கபூர். இடைவேளையில் வந்த விளம்பரத்தில் கூட முழுதாக இரண்டு நிமிடங்கள் வந்தவர், படத்தில் ம்ஹூம். ஆனாலும் குறையொன்றுமில்லை. தமிழுக்கு கலையரசன், மலையாளத்துக்கு டாம் சைன் சாக்கோ, இந்திக்கு சைஃப் அலி கான் என மாநில கோட்டாவுக்கு ஒருவரைப் பிடித்துப் போட்டிருக்கிறார்கள். பீஸ்ட்டில் டாம் சைன் சாக்கோவுக்கு என்ன வேடமோ அதே தான் இதிலும். கலையரசன் நம்மூர் சினிமாவில் இடைவேளை தாண்டினாலே அதிகம், தெலுங்கு சினிமாவில் சொல்லவா வேண்டும். சைஃப் அலி கான் மட்டும் அடுத்த பாகத்துக்கு தேவை என்பதால்...

DEVARA JUNIOR NTR

தெலுங்கு சினிமா சண்டைக் காட்சிகளில் மசாலா எப்போதுமே தூக்கலாக இருக்கும். இதில் மசாலா டன் கணக்கில் இருக்கிறது. சுறா விஜய் போல் கடலில் டைவ் அடிப்பது; படகு மேல் குதித்து படகை இரண்டு அடி தண்ணிக்குள் முக்குவது; கப்பலில் இருவருக்கு CHOKE SLAM போட்டு கப்பலே இரண்டு அடி தண்ணிக்குள் அமுக்குவது என ஒவ்வொன்றும் நிஜமான மரண மாஸ். ' இதுக்கே அசந்தா எப்படி இதைவிட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு' என சுறா முதுகில் உட்காந்து கொண்டு கடலுக்குள் ரேஸ் எல்லாம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். 'இதுக்கு எல்லாம் இப்ப சிரிப்பாங்கன்னு' ஒருவருக்குக் கூடவா தோன்றவில்லை. சத்ரபதி படத்தில் பிரபாஸும் கிட்டத்தட்ட இதைத்தான் செய்வார் என்றாலும், அந்த காட்சி எல்லாம் இந்தப் படத்தின் முன் ஒன்றுமே இல்லை ரகம் தான்.

படத்தை ஓரளவு பின்னணி இசையில் காப்பாற்றுவது அனிருத் தான். அவராலேயே காப்பாற்ற முடியாத படம் என்றால் அது இந்தியன் 2 தான் போல. சுட்டமல்லி பாடலுக்கு தியேட்டரே அனிருத் வாய்ஸில் ஹாங் சொல்லும் அளவுக்கு பாடலில் ஸ்கோர் செய்திருக்கிறார். கடல் காட்சிகளை எப்படி எப்படியோ படமாக்கியிருக்கிறோம் என பேட்டியளித்திருந்தார் ரத்னவேல். வெரி சாரி ப்ரோ. இந்தப் படத்தை எப்போது இரண்டு பாகமாக எடுக்கலாம் என கொர்டலா சிவா முடிவெடுத்தார் என தெரியவில்லை. பாகுபலி முதல் பாகத்தின் க்ளைமேக்ஸை ராஜமௌலியிடம் இருந்து வாங்கி வந்ததெல்லாம் சரி தான். ஆனால், இந்தப் படத்தில் எதற்கு என்று தான் தெரியவில்லை.

பாகுபலியையும் , KGFஐயும் பார்த்து இன்னும் எத்தனை படங்கள் எடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. உண்மையில் மீண்டும் மீண்டும் அதே எண்ணெயில் பஜ்ஜி போடும் கதாசிரியர்கள் முதுகில் தான் தேவாரா கோடு போட வேண்டும்.