குறட்டை பிரச்னையிருக்கும் மனைவியை சகித்துக்கொள்கிறானா கணவன் என்பதே இந்த DEAR படத்தின் ஒன்லைன்.
தீபிகாவுக்கும் அர்ஜுனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. தனக்கு குறட்டைவிடும் பிரச்னை இருக்கிறது என்பதை மறைத்து அர்ஜுனை திருமணம் செய்துகொள்கிறார் தீபிகா. ஆனால், அர்ஜுனுக்கோ ஒரு குண்டூசி கீழே விழும் சத்தம் கேட்டால்கூட விழிப்பு வந்துவிடும். இப்படியான சூழலில் அர்ஜுனின் கனவுகள் தீபிகாவால் நாசமாகின்றன. அர்ஜுன் என்ன முடிவு எடுக்கிறான், அதை இந்த இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது DEAR படத்தின் மீதிக்கதை.
தீபிகாவாக ஐஷ்வர்யா ராஜேஷ். அவர் சிறப்பாகவே நடித்திருந்தாலும். கதாபாத்திரத்தின் தேவை வேறாக இருப்பதால், படத்திற்கு செட் ஆகவில்லை. அந்தக் கதாபாத்திரம் ஏன் அர்ஜுனுக்காகவும், அர்ஜுன் குடும்பத்துக்காகவும் இவ்வளவு கீழிறங்கி போராடுகிறது என்பதற்கான எந்தக் காட்சிகளும் படத்தில். ஜிவி பிரகாஷின் கதாபாத்திரத்திலும் இதே குளறுபடி தான். கள்வன், DEAR என அடுத்தடுத்த படங்களில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் மெருகேறிக்கொண்டே இருக்கிறார். கண்டிப்பான ஆணாதிக்கம் நிறைந்த ஆணாக காளி வெங்கட். ஒரு காட்சிகூட செட் ஆகவில்லை. அதிலும் ' எம்டன் மகன்' நாசர் போல் இவருக்கான கிளைக்கதை அதைவிட நம்மை சோதிக்கிறது. இப்படி படத்தின் கதாபாத்திரங்களுக்கும், அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுக்கும் எந்தப் பொருத்தமும் படத்தில் இல்லை. ஒரே ஆறுதல் கல்பணாவாக வரும் நந்தினி தான். மிகச்சிறப்பாக அந்தக் கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். எமோசனல் அம்மாவாக ரோஹினி. வழக்கம்போல நடித்திருக்கிறார். இளவரசு, கீதா கைலாசம் என பல தெரிந்த முகங்கள். ஆனால், பெரிதாக ஸ்கோப் ஒன்றும் இல்லை.
படத்தின் பெரும் பிரச்னை கதை எழுதப்பட்ட விதம். கதையின் பிரச்னைக்கான தீர்வாக சில கிளைக்கதைகள் வருகின்றது. ஆனால், அவை படத்தை மேலும் கீழிறக்குகிறது. " என்னைய மாதிரி என் குழந்தையும் குறட்டைவிட ஆரம்பிச்சா, அந்தக் குழந்தையும் நீ வெறுக்க ஆரம்பிச்சுடவா" தீபிகா கதாபாத்திரம் உதிர்க்கும் ஒரு வசனம் இது. இரண்டாம் பாதி முழுக்கவே இப்படியான அபத்த விஷம வசனங்கள் தான். தந்தையின் அரவணைப்பின்றி வளரும் மகன், தன் பிள்ளைக்கும் இப்படியானதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என யோசிப்பானா என்று கூட சிந்திக்காமல், நகரும் திரைக்கதை விஷமத்தனமான ஒன்றாகவேபடுகிறது. ஆனந்த் ரவிச்சந்திரன் இன்னும் பொறுப்புடன் கதையைக் கையாண்டிருக்கலாம்.ம் யாரைப் பற்றியும் எந்தக் கரிசனமும் இல்லாத அர்ஜூனுக்காக ஏன் தீபிகா அவ்வளவு இறங்கிப் போகிறார் என்பதற்கும் எவ்வித நியாயமும் சேர்க்கப்படவில்லை. எமோசனல் கனெக்ட் சுத்தமாக இல்லாததால், என்ன ஆனால் எனக்கென்ன ரீதியில் தான் படம் ஒருகட்டத்துக்கு மேல் நகர்கிறது.
டெக்னிக்கலாகவும் படம் பாஸ் மார்க் மட்டும் தான் வாங்குகிறது.
REBEL, கள்வன், DEAR என வாரவாரம் ஜிவி பிரகாஷின் படம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அவர் கதைத்தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நமக்கு மட்டுமல்ல அவருக்கும் நல்லது.
குட்நைட் படத்தையே மீண்டும் ஈயடித்து எடுத்திருந்தாலே நல்லா இருந்திருக்குமே பாஸ் என சொல்லாமல் சொல்ல வைத்துவிட்டது இந்த DEAR.