சந்தானம்  DD Returns
திரை விமர்சனம்

DD Returns Review | நம்மள சிரிக்க வைக்குற சந்தானம் மீண்டும் ரிட்டர்ன்ஸ்..!

பாடி ஷேமிங் பெருமளவு* இல்லாத, ஜாலியான காமெடி டிராக்குகளுக்கு முக்கியத்துவன் கொடுத்திருக்கும் சந்தானத்திற்கு வாழ்த்துகள்.

karthi Kg

பேய்கள் வாழும் பங்களாவுக்குள் தெரியாமல் நுழையும் ஹீரோ & டீம், பேய் சொல்லும் போட்டியில் வென்று உயிருடன் திரும்பினார்களா இல்லையா என்பதே சந்தானம் நடித்திருக்கும் DD Returns படத்தின் ஒன்லைன்.

சந்தானம்

புராதன சிற்பங்கள் விற்கும் கடை நடத்திவரும் குழந்தை (பிபின்) திருட்டு பிஸினெஸும் செய்கிறார். குழந்தை & டீம் பாண்டியின் பெரும் பணக்காரரான அன்பரசு (ஃபெப்ஸி விஜயன்) வீட்டில் திருடப் போகும் சமயம் குழந்தையின் கடையை கொள்ளை அடிக்க வருகிறார் ப்ரொபசர் (மொட்டை ராஜேந்திரன்). இவர்களுக்கு நடுவே சந்தானமும் சைக்கிள் ஓட்ட, பணம் பலரின் கை மாறுகிறது. ஒரு வழியாக நாம் எதிர்பார்த்தது போல, பணம் பேய் பங்களாவுக்கு போக, சந்தானம் & டீம் பேயுடன் டீல் போட்டு பணத்தை மீட்கிறாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

படத்தின் இரண்டு பெரும் பலம் சந்தானமும் , இந்த சீரிஸின் முந்தைய வெற்றிகளும். பேய் படங்களில் காமெடியை மெல்லிய சாரல் போல் தூவி லாரன்ஸ் ஒரு பாணியில் படமெடுக்க, 'லொள்ளு சபா' ராம்பாலா அதை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றார். பேயையே காமெடியாக டீல் செய்யும் ராம்பாலாவின் பாணியை இந்தப் படத்தில் கச்சிதமாகத் தொடர்ந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த். கதைக்குள் செல்ல சற்று நேரம் எடுத்துக்கொண்டாலும், அதன் பின்னர் பல காட்சிகள் ROFLMAX ரகம். இடைவேளைக்குப் பின்னர் இப்படி திரையரங்கமே விழுந்து விழுந்து சிரித்து சில மாதங்கள் ஆகிவிட்டது.

அடுத்ததாக சந்தானம். கதை, திரைக்கதையிலும் அவரின் பங்கு பெருமளவு இருந்திருக்கிறது. பொதுவாக சந்தானம் படத்தில் அவர் மட்டுமே பெரும்பாலான காட்சிகளில் தோன்றுவார். காமெடி டிராக்கும் அவரைச் சுற்றியே நடக்கும். ஆனால், இந்தப் படத்தில் சந்தானத்துக்குப் பக்கபலமாக ஒரு பெரும் பட்டாளத்தையே கதைக்குள் இணைத்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், மாறன், ஃபெப்ஸி விஜயன், பிபின், சேது, தங்கதுரை, தீனா, பிபின் என பலருக்கு சிறப்பான காமெடி டிராக் எழுதப்பட்டிருக்கிறது. வெறுமனே பாடலுக்கு வரும் நாயகி என்பதைக் கடந்து சுரபிக்கு நடிக்க வாய்ப்பிருக்கும் கதை. அவரும் அதை குறையின்றி செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும், வெள்ளந்தியாய் முனீஸ்காந்த் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஃபெப்ஸி விஜயன், தீனா மாதிரியான டெரர் பீஸ்களை காமெடியன்களாக்குவது சவாலான காரியம். அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அதிலும் ஃபெப்ஸி விஜயனை வைத்து அவரின் மேனரிஸத்தையே டரியல் செய்திருக்கிறார்கள். படத்தின் இறுதி வசனம் வரை சந்தானத்தின் கவுன்ட்டர் அட்டகாசம். கதை, திரைக்கதையிலும் சந்தானத்தின் பங்கு இருப்பதை கவனிக்க முடிகிறது.


பாடி ஷேமிங் பெருமளவு இல்லாத, ஜாலியான காமெடி டிராக்குகளுக்கு முக்கியத்துவன் கொடுத்திருக்கும் சந்தானத்திற்கு வாழ்த்துகள்.

ஜொர்த்தால பாடலின் மூலம் புகழ்பெற்ற ofRo படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சாண்டி துணையும் வரும் ஜாலி கானா லைட்டாக ரசிக்க வைக்கிறது . மோகனின் கலை அமைப்பும், ஹரி ஹரி சுதனின் VFXம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தில் வரும் காமெடியில் அது பெரிய குறையாக தெரியவில்லை. இறுதியில் வரும் சில கொடூர கொலைகளை தவிர்த்திருக்கலாம். ஆனால், இக்கால குழந்தைகள் அதைவிட கொடூரமான கொலைகளை மொபலை கேமிலேயே விளையாடுவதால் வார்னிங் கொடுப்பதா வேண்டாமா என தெரியவில்லை.

ஜாலியாக உங்கள் நண்பர்களுடன் சென்று திரையரங்கில் சிரித்துவர நல்லதொரு காமெடி கதகளி இந்த DD Returns.