தசரா 
திரை விமர்சனம்

நானியின் ‘தசரா’ படம் எப்படி இருக்கு?

அதிகாரப் போட்டியினால் ஒரு கிராமத்திற்கு வரும் சிக்கல்களும், அதில் மாட்டிக்கொள்ளும் நபர்களையும் பற்றிய கதையே 'தசரா'.

Johnson

வீரலபள்ளி கிராம மக்கள் நிலக்கரி சுரங்க வேலையை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இந்த ஊரில் நிலக்கரியைத் திருடி விற்று குடித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தரணி (நானி) மற்றும் சூரி (தீக்‌ஷித் ஷெட்டி). வீரலபள்ளி கிராமத்துக்கு இரண்டு சிக்கல்கள். ஒன்று அந்த ஊரில் இருக்கும் சில்க் பார், இன்னொன்று கிராமத் தலைவராக இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் போட்டி. ஊரில் கிராம தலைவர் தேர்தலில் ஜெயிப்பவருக்கே பார் நடத்தும் உரிமை வழங்கப்படும். ஊரில் உள்ள ஆண்கள் மொத்தமும் பாரிலேயே குடியிருக்கிறார்கள். எனவே அவர்களை கைக்குள் வைத்துக் கொள்ள அந்த பாரை கைப்பற்றுவது, கிராம தலைவர் ஆவதை விட முக்கியம். அதனால் ராஜண்ணா (சாய் குமார்) ஒருபுறமும், ஷிவண்ணா (சமுத்திரக்கனி), சின்னா (ஷைன் டாம் சாக்கோ) மறுபுறமும் போட்டிக்கு நிற்கிறார்கள். எதிர்பாராத விதமாக இந்த அரசியல் ஆட்டத்துக்குள் தரணி மற்றும் சூரி சிக்கிக் கொள்கிறார்கள். இதன்பிறகு அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வாழ்வு என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.

நானி, தசரா

இந்தப் படம் அதன் விஷுவலுக்காவே தனித்துத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் மற்றும் கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா, வீரலப்பள்ளி கிராமத்தை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்தையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்தக் கதை சொல்லல் ஓரளவு அழுத்தமாக இருக்க பெரிதும் உதவுவது சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை. மைனரு வேட்டி கட்டி பாடலும் மிக சிறப்பு. நடிகர்களின் பர்ஃபாமன்ஸாக பார்த்தால் நானி உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். பல எமோஷனலான காட்சிகளில், காதலை ரகசியமாக வைத்துக் கொள்ளும் காட்சி, ஒரு இறப்பால் உறைந்து போவது என பல இடங்களில் சிறப்பு. கீர்த்தி சுரேஷ் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி போன்றவர்களின் கதாபாத்திரங்கள் நன்றாக எழுதப்படாததால், அந்தக் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. படத்தின் ஹைலைட்டான இரண்டு இடங்கள், இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ்-ல வரும் சண்டைக்காட்சிகள். இடைவேளையின் போது வரும் சேசிங் காட்சி நம்மையே அச்சமூட்டும் படி அமைக்கப்பட்டிருந்தது.

படத்தில் பலவீனமாக இருப்பது, இதன் கதை. மிகப் பார்த்துப் பழகிய கதைதான் இருக்கிறது என்பதும், அதில் வரும் திருப்பம் ஒன்றும் அரதப் பழைய ஒன்று என்பதால் நம்முடைய ஆர்வத்தை தூண்டாமல் நகர்கிறது படம். படத்தில் நானி - தீக்‌ஷித் ஷெட்டி நண்பர்கள் என சொல்லப்பட்டாலும், அந்த நட்பு எவ்வளவு வலுவானது என்பதைப் பற்றியோ, ஒரு நெகிழ்ச்சியான தருணமோ இல்லை. கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரம் இறந்து போகும் போதும் நமக்கு எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக இந்தப் படத்தின் பல காட்சிகள் சுகுமாரின் ரங்கஸ்தலம், புஷ்பா போன்ற படங்களை நினைவூட்டுகிறது. ஆனால் அவற்றில் இருந்த ஒரு எமோஷனல் வெயிட்டேஜ் இந்தப் படத்தில் மிஸ்.

நானி, கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் ஸ்ரீகாந்த் வழக்கமான ஒரு பழிக்குப் பழி கதையை, புது வடிவத்தில் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அது வெறுமனே புதுமையான லொகேஷனில் எடுக்கப்பட்ட வழக்கமான சினிமாவாக நிறைவடைகிறது. மேலும் படத்தில் குரூரமான வன்முறைக் காட்சிகள் உள்ளது, அவற்றை மனதில் வைத்துக் கொண்டு படத்திற்கு செல்லுங்கள். எனக்குப் புதிதாக எதுவும் தேவை இல்லை, சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்றால் தாராளமாக தசராவை தரிசிக்கலாம். மற்றவர்களுக்கு தசரா ஏமாற்றமே அளிக்கும்.