கேங்க்ஸ்டர் ராசூவைப் பத்திரமாக நீதிமன்றத்தில் ஒப்படைத்தாரா கான்ஸ்டபிள் ஷிவா என்பது தான் கஸ்டடி படத்தின் ஒன்லைன்.
ஒரு உயிரைக் காப்பாற்றுவது என வந்துவிட்டால், முதல்வர் காரைக்கூட நிறுத்தும் அளவுக்கு நேர்மையான கான்ஸ்டபிள் ஷிவா. ஆனாலும், கான்ஸ்டபிளுக்கு காதலிலும் காவல் நிலையத்திலும் தொடர் சோதனைகள். தான் காதலிக்கும் ரேவதிக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடத்த நிச்சயிக்கிறார்கள் ரேவதி குடும்பத்தினர். இதற்கிடையே ஷிவா Night Duty-ல் இருக்கும் போது, ஷிவாவிடம் தாமாகவே வந்து சிக்கிக்கொள்கிறார் ராசூ. ராசூ யார் அவரை ஏன் 'காப்பாற்ற' துடிக்கிறது மாநில அரசு... சிபிஐ ஏன் துரத்துகிறது... ராசூவை உயிருடன் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றாரா ஷிவா.. உள்ளிட்ட கேள்விகளுக்கு த்ரில்லர் பாணியில் விடை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
கான்ஸ்டபிள் ஷிவாவாக நாக சைத்தன்யா. அவர் பேசும் தெலுங்கு கலந்த தமிழ் தவிர பெரிதாய் குறை சொல்ல முடியாத நடிப்பு. முதல்வர் தாட்சாயினாக ப்ரியாமணி. எதிர்மறை கதாபாத்திரம் என்றான பின், இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் காட்டியிருக்கலாம். ம்ஹூம். படத்தில் ரகளையான கதாபாத்திரம் ராஜூ என்கிற ராசூவாக வரும் அரவிந்த் சுவாமிக்குத்தான். "லிவர் எங்க இருக்குன்னே தெரியல, நீயெல்லாம் அடுத்த ராசூவா" என தன் உடலில் சொருகிய கத்தியை எடுத்து எதிராளியைக் குத்துவதாகட்டும், கீர்த்தி ஷெட்டியிடம் ஒன் சைடு லவ் பற்றி சொல்வதாகட்டும் நல்லதொரு பெர்பாமன்ஸ்.
சிபிஐ அதிகாரிகளாக சம்பத், 'ஃபோன் ஆஃப் பிரெண்டு' ஜெயப்பிரகாஷ் என வெங்கட் பிரபு கேங்கில் இருந்து சிபிஐ அதிகாரிகளை மட்டும் பிடித்துவந்துவிட்டார். தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு மத்தியில் ஐஜி நட்ராஜாக வரும் சரத்குமாருக்கே மட்டுமே சற்று கனமான வேடம். ஆனால், மேனரிசம் என்கிற பெயரில் சிகரெட்டை ஏதோ செய்துகொண்டிருந்தது யாருடைய ஐடியா என்று தெரியவில்லை. ராம்கி, ஜீவா, வைபவ் , ஆனந்தி என நீளும் கேமியோக்கள் பட்டியலில் உலக சூப்பர் ஸ்டார் சிவா மட்டும் மிஸ்ஸிங்.
வராது வந்த மாமழையாக வந்து சிக்கும் கேங்க்ஸ்டரை சட்டத்தின் முன் நிறுத்தப்போராடும் காவல்துறையின் கடைநிலை ஊழியரான கான்ஸ்டபிள் என்கிற வகையில் சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் கதை டேக் ஆஃப் ஆகும் வரையில் வரக்கூடிய 'ரொமான்டிக் மொமன்ட்ல்களை' பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
முதல் முப்பது நிமிடங்கள் நம் பொறுமையை ரொம்பவே சோதித்துவிடுகிறது. படத்திற்கு எவ்வளவு தாமதமாக வருகிறோமோ அவ்வளவு நல்லது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ராம்கிக்கு வரும் விக்ரம் போஸ்டர்; வெண்ணிலா கிஷோர் வைத்து வரும் பைலிங்குவல் நக்கல்; 'குடிச்சு குடிச்சு பிரேம்ஜி மாதிரி ஆகிடாத' போன்ற இடங்களில் வெங்கட் பிரபு டச்.
நேர்மை, நியாயம், அறம், உண்மை, சத்தியம் என நாக சைத்தன்யா வகுப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறார். நாம் பார்ப்பது வெங்கட் பிரபு படம் தானே என நமக்கே சற்று கன்ப்யூசன் வந்துவிடுகிறது. அதனாலேயே என்னவோ "நேர்மையான போலீஸ், நேர்மையான சிபிஐ, நேர்மையான அப்பா.. என்ன ஒரு பேட் வைப்ரேசனா (Bad Vibration-ஆ) இருக்கு" என அரவிந்த் சுவாமி சொல்லும் போது ஒட்டுமொத்த திரையரங்கும் வெடித்துச் சிரிக்கிறது. சுவாரஸ்யமற்று நகரும் முதல் பாதியே, சற்று சுமாராக நகரும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றிவிடுகிறது.
படம் பைலிங்குவல் என்று சொல்லப்பட்டாலும் பல காட்சிகளில் டப்பிங் நெடி தூக்கல்.
இளையராஜா, யுவன் கூட்டணியில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை என்பது தான் பெருஞ்சோகம். அதிலும் ராஜா பாடியிருக்கும் அந்த சோக பாடல், சாரி ராஜா சார். பின்னணி இசை அருமை. காவல் நிலையத்தில் நடக்கும் சண்டைக் காட்சியில் SR கதிரின் ஒளிப்பதிவு அப்ளாஸ் ரகம்.
மாநாடு அளவுக்கும் இல்லாமல், பிரியாணி அளவுக்கும் இல்லாமல் மய்யமாக இருக்கிறது இந்த வெங்கட் பிரபுவின் கஸ்டடி.