'அங்க அடிச்சா இங்க வலிக்கும்' என்ற கூற்றைப் போல, கனவில் பேயிடம் சிக்கும் ஹூரோ குடும்பம், நிஜத்தில் படும் அவஸ்தைகளே `காஞ்சூரிங் கண்ணப்பன்’
கண்ணப்பன் (சதீஷ்) ஒரு வீடியோ கேம் டெவலப்பராகும் ஆர்வத்தில் இருக்கிறார். ஒருநாள் மோட்டார் வேலை செய்யவில்லை என கிணற்றில் நீர் இறைப்பவருக்கு ஒரு வினோதமான ட்ரீம் கேட்சர் கிடைக்கிறது. அதிலிருந்து ஒரு இறகை எதேர்ச்சையாக கண்ணப்பன் பறித்து விடுகிறார், அன்று இரவிலிருந்து ஆரம்பமாகிறது சிக்கல். கனவில் ஒரு அரண்மனைக்கு சென்று, பேயிடம் சிக்கி ரத்தகாயம் எல்லாம் ஆகிறது. விழித்துப் பார்த்தால் கனவில் பட்ட அடி நிஜத்திலும் அப்படியே இருக்கிறது. இதற்கு உதவிகேட்டு எக்ஸார்சிஸ்ட் ஏகாம்பரத்திடம் (நாசர்) செல்ல, அவர் இந்த ட்ரீம் கேட்சர் சபிக்கப்பட்டது, இதிலிருந்து தப்பிக்க ஒரு சாவி அந்த அரண்மனையில் உள்ளது என சொல்கிறார். எதிர்பாராத விதமாக அந்த ட்ரீம் கேட்சரின் இறகுகளை, கண்ணப்பனின் குடும்பத்தினரும், மற்றும் சிலரும் பறித்துவிட, மொத்த கும்பலும் பேயிடம் சிக்குகிறது. இதிலிருந்து இவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே மீதிக்கதை.
படத்தில் பாசிட்டிவ் என சொல்வதென்றால், படத்தின் ஒன்லைன் மிகவும் ஈர்க்கும்படி இருந்தது. வழக்கமான பேய் படத்திலிருந்து, இது வித்தியாசமாக இருக்கும் போல என்ற எதிர்பார்ப்பையும் கொடுத்தது. படம் தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே கதையை துவங்கிய விதமும் பலம். சதீஷ், சரண்யா, ஆனந்த்ராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன், ஆதித்யா கதிர் என ஆளாளுக்கு காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்கள். முதலில் இவர்கள் செய்யும் காமெடி எரிச்சலூட்டவில்லை என்பதே ஓரளவுக்கு ஆறுதல் தான். இவை தவிர பாசிட்டிவாக சொல்ல ஒன்றும் இல்லை என்பதுதான் படத்தின் பிரச்சனை.
ஒரு ஐடியாவாக இந்த களம் ஈர்த்தாலும், அதற்குள் இருக்கும் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிடைக்கும் கேப்பில் போடும் கவுன்ட்டர்கள் தொடங்கி, தூங்காமல் இருக்க எந்தெந்த கதாப்பாத்திரங்கள் என்ன செய்கிறது என்பது வரை முடிந்த அளவு காமெடி படத்துக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதை எப்படி கொடுப்பது என்பதில் தடுமாறியிருக்கிறார். கூடவே இதன் ஹாரர் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் கொஞ்சமேனும் சிரிக்க வைக்கும் காமெடிகளும் காணாமல் போகிறது. ஒரு கட்டத்தில் இது சீரியஸ் படமா, காமெடி படமா என்ற குழப்பமும் ஏற்படுகிறது. படத்தில் சொல்லப்படும் ஒரு ஃப்ளாஷ்பேக் கேட்கும் போது, படத்தின் கதாப்பாத்திரங்களைப் போல நாமும் தூக்கத்தை அடக்க ரொம்பவே சிரமப்படுகிறோம். அத்தனை மேலோட்டமான எழுத்து. எக்ஸார்சிஸ்ட் ஏகாம்பரமாக வரும் நாசர், ப்ளாக் கதாப்பாத்திரத்தில் வரும் ரெஜினா படத்தில் மிக சீரியஸாகவே பல விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் கேட்கும் போது ஸ்பூஃப் படம் பார்ப்பது போன்ற உணர்வு. அதிலும் ஃப்ளாஷ்பேக்கில் வரும் கதை எப்படி நிகழ் கால கதாப்பாத்திரங்களுடன் தொடர்பாகிறது என வைக்கப்பட்டிருக்கும் லிங்க் சுத்த போங்கு.
யுவன் பின்னணி இசையில் படத்தின் ரெடர்ரையும், ஹூமரையும் கூட்டுகிறார். ஆனால் பாடலில் சுத்த சொதப்பல்.
இது போன்ற ஃபேண்டஸி படங்களில் சொல்லப்படும் லாஜிக்குகள் தான், நாயகனுக்கு வரும் சவாலை சுவாரஸ்யப்படுத்தும். ஆனால், இதில் ஹீரோவுக்கு வரும் சவால் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. எனவே படமும் நமக்கு மிக சுமாராகதான் இருக்கிறது. ஒன்லைனைப் போல படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி, காட்சிகளை மெருகேற்றியிருந்தால் சிறப்பான படமாக வந்திருக்கும். மற்றபடி இந்த வாரம் வந்திருக்கும் மற்றொமொரு சுமார் படமாகவே எஞ்சுகிறது காஞ்சூரிங் கண்ணப்பன்.