குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளும், அதனால் குழந்தையும், குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது எனச் சொல்கிறது `சித்தா’
ஈஸ்வரன் (சித்தார்த்) பழனியில் வசிக்கும் இளைஞன். அண்ணன் இறந்த பின் அவர் செய்து கொண்டிருந்த, மாநகராட்சி அலுவலக வேலைக்கு செல்கிறார். அண்ணன் குழந்தை சுந்தரியை (சஹர்ஷா ஸ்ரீ) தன் மகளைப் போல நேசித்து வளர்க்கிறார். கூடவே நண்பன் வடிவேலுவுடன் () கலாட்டா, காதலி சக்தியுடன் (நிமிஷா சஜயன்) ரொமான்ஸ் என ஜாலியாக செல்கிறது நாட்கள். ஆனால், திடீரென நிகழும் ஒரு குற்றச் சம்பவம் ஈஸ்வரன் நேசித்த அனைவரிடமிருந்தும் அவரைப் பிரிக்கிறது. இதில் உச்சகட்டமாக சுந்தரியும் கடத்தப்படுகிறாள். சுந்தரிக்கு என்ன ஆனது? அவளை ஈஸ்வரன் மீட்டுக் கொண்டு வந்தாரா? என்பதெல்லாம் மீதிக் கதை.
இயக்குநர் அருண்குமாரின் `பண்ணையாரும் பத்மினியும்’ மிக அழகான படம். அதன் பின் அவர் இயக்கிய `சேதுபதி’, `சிந்துபாத்’ படங்களில் அந்த முழுமை இல்லை. ஆனால் அதை `சித்தா’வில் சிறப்பாக சரி செய்திருக்கிறார். படத்தில் சின்ன விஷயங்களில் துவங்கி உணர்வு ரீதியான போராட்டம் வரை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார். இது பாலியல் குற்றங்கள், குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை மையப்படுத்திய படம் என்பது தெரிந்த பின்பு, மெல்ல மெல்ல என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வு எழுகிறது. இரண்டாம் பாதி ஒரு இன்வெஸ்டிகேஷன் படமாக மாறும் போதும், எமோஷனலான விஷயங்களை கைவிடாமல் நகர்ந்தது சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயல்பு தன்மையுடன் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.
உதாரணமாக, சக்தி கதாபாத்திரத்திற்கு பால்யத்தில் நிகழ்ந்த ஒரு மோசமான நிகழ்வைப் பற்றி சொல்லாமல் சொல்வதும், பின்பு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் இடமும் மிக இயல்பாக, அர்த்தமுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தின் பல காட்சிகள் இப்படி இருந்தது நிஜமான சம்பவங்களை பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது. மேலும் படம் தொடர்ச்சியாக நம்முன் கேள்விகளை வைத்துக் கொண்டே இருக்கிறது.
”இந்த மாதிரி ஆட்களுக்கு எதிரா கேஸ் குடுக்காம குடும்ப கௌரவம், பேர் கெட்டுடும்னு போற உனக்கும், இந்த க்ரைம பண்ண கிரிமினலுக்கும் என்ன வித்தியாசம்?”, “இப்பவும் நீ உனக்கு என்ன தேவையோ அத தான் பண்ணிக்கிற, அந்த குழந்தைக்கு என்ன தேவைனு யோசிக்க மாட்டில்ல?” இது போன்ற சமூக தடுமாற்றங்களை கேள்விகளாக வசனத்தில் வைத்ததற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அத்தனை நடிகர்களின் நடிப்பும் அவ்வளவு இயல்பாக இருந்தது. சித்தார்த் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனாக பொருந்தவில்லை என்றாலும், நடிப்பாக அசத்தியிருக்கிறார். ஒரு காட்சியில், அம்மாவும் மகளும் பேசுவதை எதேர்ச்சையாக கேட்க நேரும் போது, கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவர் பார்க்கும் பார்வை அவ்வளவு வலி நிறைந்ததாக இருந்தது. நிமிஷா ஒரு காட்சியில் பயந்து பதட்டமாகி, பின்பு சகஜ நிலைக்குத் திரும்பும் ஒரு காட்சியில் அத்தனை இயல்பு. வடிவேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி நடிப்பு மிக நேர்த்தி. சித்தார்தை கட்டியணைத்து அழும் இடம் அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரி, பொன்னி பாத்திரங்களில் நடித்திருந்த குழந்தைகள் சஹர்ஷா ஸ்ரீ மற்றும் அஃபியா நடிப்பும் மிகப் பிரமாதம்.
சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் மிகச்சிறப்பு. குறிப்பாக `கண்கள் ஏதோ’ பாடல் அத்தனை இனிமை. விஷால் சந்திரசேகர் இசையில் படத்தின் பின்னணி இசை கதையின் பதைபதைப்பை நமக்கும் தொற்றிக் கொள்ளச் செய்கிறது. படத்தின் கூடுதல் பலம் வினோத் தணிகாசலத்தின் ஒலிக்கலவை. சின்னச் சின்ன சப்தங்களையும் படத்தில் சேர்த்திருப்பது படத்திற்கு இன்னும் ஆழம் சேர்த்திருக்கிறது. பாலாஜி சுப்ரமணியனின் ஒளிப்பதிவு பல காட்சிகளை மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறது.
படத்தின் குறைகள் என சொல்ல முடியாது. ஒரு எச்சரிக்கை வேண்டுமானால் கொடுக்கலாம். படம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பற்றி பேசியிருப்பதும், அதைப் பற்றி விவாதித்திருப்பதும் சிறந்த விஷயம் என்னும் அதே வேளையில், இது மனதிற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் படம். அதை மனதில் வைத்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துச் செல்வது பற்றி சிந்தியுங்கள்.
மற்றபடி மொத்தத்தில் இந்த ஆண்டில் வெளியான சிறந்த படங்களில் `சித்தா’வுக்கும் கண்டிப்பாக இடமுண்டு!