பூமியைக் காக்க வரும் ஏலியன், பூமியிலிருக்கும் மனிதர்களிடம் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதே அயலானின் கதை.
பூம்பாறை கிராமத்தில் ' நலம் , அன்புடன்' இயற்கை விவசாயம் என வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இயற்கை விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால் நம்மைப் போலவே அவரும் வேலைவாய்ப்புக்காக சென்னை நோக்கி வருகிறார். அந்த இடத்தில் கருணாகரண்& டீமுடன் இணைகிறார். இன்னொரு பக்கம், மிகவும் சக்திவாய்ந்த 'ஸ்பார்க்' என்கிற கல்லை கண்டுபிடிக்கிறார் ஆர்யன். அதை வைத்து உலகை ஆளலாம் என ஆர்யன் , இஷா கோபிகர் டீம் நினைக்கிறது. ' இது எங்க ஊரு கல்லாக்கும்' என கல்லை எடுத்துச் செல்ல வருகிறது ஏலியன். இந்த மூவருக்கும் இடையே என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் அயலான் திரைப்படம்.
படத்தின் பெரும் பலம் VFX. இந்திய சினிமாவில் விசுவல் எஃபெக்ட்ஸ் என்றாலே ,'சரி ஓரளவுக்குத்தான் இருக்கும்' என்கிற மனநிலையில் தான் நாமே அந்தப் படத்தை அணுகுவோம். ஆனால், phantom ஸ்டூடியோஸுடன் இணைந்து அயலான் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். எந்தக் காட்சியிலும் எந்தப் பிசிறும் இல்லை. இத்தனை ஆண்டுகால தாமதத்தை மறக்கச் செய்துவிடுகிறது, அயலானின் VFX. ஏலியனை நம்மூருக்குள் செட் செய்த வகையில் அப்ளாஸ் அள்ளுகிறது அயலான்.
படம் முழுக்க VFX காட்சிகள் தான் என்பதால் நிறைய காட்சிகளில் கற்பனையிலேயே நடித்திருக்க வேண்டும். அனைத்து நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கும், அயலானுக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கிறது. குட்டீஸ்களுக்கு இருவரும் இணைந்து சண்டையிடும் காட்சிகள் சிறந்த விருந்தாக அமையலாம். இன்று நேற்று நாளை திரைப்படம் போலவே இதிலும் காமெடி டிப்பார்ட்மென்ட்டை கருணாகரனிடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். கருணாகரன், யோகி பாபு, கோதண்டம் டீம் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
ஏலியன் கதையை குழந்தைகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் , நல்லதொரு கதைசொல்லியாக சின்ன சின்ன எளிமையான விஷயங்களை கதைக்குள் சேர்த்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். ஆனால், எதிர்மறை கதாபாத்திரங்களின் (ஷர்த் கேல்கர் ) நடிப்பு போதாமையும், இரண்டாம் பாதியில் கதை எங்கே செல்கிறது என்கிற போதாமையும் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. முதலீட்டாளரில் ஒருவர் வெளியேறினாலே, அவரை பறந்து மிருகத்தனமாக கொல்கிறார் ஈஷா கோபிகர். இதென்னடா இப்படியொரு நேர்மையான முதலீட்டாளரா என ஷாக் ஆகி முடிவதற்குள்; அடுத்த அபத்தத்தை இறக்குகிறார்கள். பிளாஸ்டிக் மக்க 3000 ஆண்டுகள் என்றதும் பீதியாகும் ஏலியன், ரூபாய் நோட்டு விரைவில் மக்கிவிடும் என்பதால் காற்றில் பறக்க விடுகிறதாம். ஏம்பா தமிழ் மொழியை தேர்வு செய்யும் வல்லமை படைத்த ஏலியனுக்கு ரூபாய் நோட்டு கூடவா தெரியாது. ராகவா லாரன்ஸ் உடம்பை பேய்க்கு வாடகைக்குவிடுவது போல, ஒரு கட்டத்தில் ஏலியன் மனது வைத்தால், யார் வேண்டுமானாலும் ஏலியன் ஆகிவிடலாம் என்பதில் ஆரம்பித்து அத்தனை உருட்டுகள். சயின்ஸ் பிக்சன் , ஃபேன்டஸி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது . லாஜிக் எல்லாம் யாரும் பார்க்கலைங்க ஆனால் இதெல்லாம் அபத்தமாக இருக்கிறது என்பது தான் கடுப்பைக் கிளப்புகிறது. அதிலும் இரண்டாம் பாதி முழுக்கவே' தொட்டா பவருடா' என போங்காட்டம் ஆடி வைத்திருக்கிறார்கள். முடிச்சுக்கலாமே என நாமே ஃபீல் செய்யும் அளவுக்கு படம் நீண்டுகொண்டே போகிறது.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் மட்டும் ரஹ்மான் தன் பேருக்கான வேலை பார்த்திருக்கிறார்.
குழந்தைகளுக்கான ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால், குழந்தைகள் கூட இப்போதெல்லாம் இதைவிட ஸ்மார்ட்டாக கதைகளை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே யதார்த்தம்