2018 2018
திரை விமர்சனம்

இதுதான் நிஜ `கேரளா ஸ்டோரி’ - 2018 திரைப்படம் ஒரு பார்வை

இந்தப் படம் A Tight Hug From Kerala For Kerala and the Helping Hands Involved to Surviving Kerala in 2018 Floods. இதுதான் நிஜ `கேரளா ஸ்டோரி’

Johnson

2018ல் கேரளா சந்தித்த மழை வெள்ளமும், அதிலிருந்து கேரளா எப்படி மீண்டது என்பதையும் சொல்கிறது 2018 Everyone is Hero

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்னா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதற்கு முன் `ஓம் ஷாந்தி ஓசன்னா’, `சாராஸ்’ படங்களைக் கொடுத்தவர் இந்த முறை அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும், மனிதமும் கலந்த ஒரு கதையைக் கூறியிருக்கிறார். ஒரு இயற்கை சீற்றத்தை மையமாகக் கொண்ட சினிமா மூலம், முடிந்த அளவு மனிதர்கள் மீதான நம்பிக்கையைக் கூட்டுகிறார்.

Everyone is Hero என்ற படத்தின் டேக் லைன் தான் கதையின் மையம். அதை சில மனிதர்கள் மூலமாகவும் அவர்களின் பயணம் மூலமாகவும் சொல்லத் துவங்குகிறது படம். ஷாஜி (குஞ்சாக்கோ போபன்) தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும், நிக்சனுக்கு (ஆசிஃப் அலி) போட்டோ ஷூட்டுக்காக வேறு நகரத்துக்கு செல்லவேண்டும், துபாயிலிருந்து கிளம்பிவரும் தினு (வினீத் ஸ்ரீனிவாசன்) கேரளா மருத்துவமனையில் இருக்கும் தனது தாயைப் பார்க்கச் செல்ல வேண்டும்; பார்வைச் சவால் கொண்ட பாஷி (இந்திரன்ஸ்) கேம்ப்புக்குச் செல்ல வேண்டும்; கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளாக வந்திறங்கும் வெளி நாட்டு ஜோடிக்கு கேரளாவை சுற்றிப்பார்க்க செல்ல வேண்டும். ஆனால் இவர்களது வழியை எல்லாம் மழையும் வெள்ளமும் தடுக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இவர்கள் சென்றார்களா? மொத்த கேரளமும் எப்படி எல்லாம் பாதிக்கிறது, இடையே நிகழும் மரணங்கள், வெள்ளத்திலிருந்து கேரளா எப்படி மீள்கிறது, அதற்கு உதவியாக வந்தவர்கள் யார் என்பதை நெகிழ்ச்சியாகச் சொல்லி முடிக்கிறது படம்.

2018

மேலோட்டமாகப் பார்த்தால் இது கேரள வெள்ளத்தைப் பற்றிய ஒரு ஆவணப்படம் போன்ற தோற்றமளிக்கலாம், ஆனால் தெளிவான கதாபாத்திரங்களாலும், ஆத்மார்த்தமான காட்சிகளாலும், சிறு சிறு கதைப் பின்னணிகளாலும் இந்த ஆவணப்படத்தை உயிரோவியம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பது பலரது பாத்திரங்களில் உணர முடிந்தது. மழையிலிருந்து பாதுகாக்கும் குடையின் விளம்பரத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரம், பின்பு அதே மழையில் நனைந்தபடி மீட்பு பணிக்காக செல்வது, இந்த நாட்டில் இருந்து பறந்து சென்றுவிட வேண்டும் என நினைக்கும் ஒரு கதாபாத்திரம் வெள்ளத்தில் மூழ்கி இறப்பது, எல்லோரிடத்திலும் வெறுப்பை மட்டுமே காட்டும் ஒரு கதாபாத்திரம், இந்த மழையாலும் நடக்கும் சம்பவங்களாலும் மாறுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். இந்தப் படத்தின் எல்லா விஷயங்களும் எதோ ஒரு விதத்தில் நீருடன் கனெக்ட் ஆகிக் கொண்டே இருக்கும். டிவியில் ஓடும் ஒரு கார்டூன் கூட. கூடவே ஒவ்வொரு கதாபாத்திரங்களுடன் எப்படி கனெக்ட் ஆகிறது என்பதை எழுதியிருந்த விதமும் சிறப்பு.

நிஜமாக நடந்த பல சம்பவங்களை படத்தினூடே காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர். மக்களை மீட்க மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கிளம்புவது, கர்ப்பிணிப் பெண்ணை ஹெல்காப்டரில் சேர்க்க நடக்கும் போராட்டம், மாடியில் துணிகள் மூலம் எழுதப்படும் தேங்க் யூ போன்றவை எல்லாம் மனதை நெகிழச் செய்கிறது.

நடிப்பு பொறுத்தவரை நரேன், ஆசிஃப் அலி, லால் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடக்கும் விஷயங்கள், அந்த வீட்டுப் பெண் பேசும் ஒரு நெகிழ்ச்சியன வசனம் என மொத்த காட்சியும், நடிகர்களின் நடிப்பும் வெகு சிறப்பு. இவர்கள் தவிர டொவினோ தாமஸ், இந்திரன்ஸ், அபர்ணா, குஞ்சாக்கோ, ஷிவதா, வினீத், அஜூ வர்கீஸ், சிறப்பு தோற்றத்தில் வரும் ரமேஷ் திலக் உட்பட பலரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக வெள்ளக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப கலை இயக்கமும், சிஜியும் கச்சிதமாக பிணைந்திருக்கிறது. நோபின் பால் இசையில் பல காட்சிகள் எமோஷனலாக நம்மை தொடுகிறது.

படத்தின் குறைகள் என யோசித்தால் படம் முழுக்கவே ஒரு குழப்பம் இருக்கிறது. நிஜமாக நடந்த கதையை நிஜத்துக்கு நெருக்கமாக எடுப்பதா, அல்லது சினிமாத்தனம் கலந்து அவற்றை எடுப்பதா என்ற குழப்பத்தை உணர முடிகிறது. குறிப்பாக நிக்சன் கதாபாத்திம் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தைக் காட்டும் போதே பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்குத் தெரியும். அதை அவ்வளவு சினிமாத்தனமாக எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இது போன்று சிறு சிறு குறைகள் உண்டு.

ஆனால், 2018ல் கேரள வெள்ளத்தை நேரடியாக பார்த்தாலும் இல்லை என்றாலும் கூட, ஒரு எமோஷனலான அனுபவத்தை வழங்கக் கூடியது இந்தப் படம். மொத்தத்தில் இந்தப் படம் A Tight Hug From Kerala For Kerala and the Helping Hands Involved to Surviving Kerala in 2018 Floods. இதுதான் நிஜ `கேரளா ஸ்டோரி’