சினிமா

பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்? ’ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு!

பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்? ’ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு!

webteam

’ஹோட்டல் மும்பை’ என்ற ஹாலிவுட் படத்தில் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பதை குறிப்பிடாததால் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.

2008-ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். மும்பை ரயில்வே ஸ்டேஷன், தி ஓபராய் ஓட்டல் , தாஜ் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே உட்பட 8 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப் பட்ட இந்த தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 308 பேர் காயமடைந்தனர். இதில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப் பட் டான். பின்னர் அவனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி ’மும்பை ஹோட்டல்’ என்ற பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி மராஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் தேவ் படேல், ஆர்மி ஹாமர், அனுபம் கெர், ஜேசன் ஐசாக்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 7-ம் தேதி டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது. படத்தைப் பார்த்த பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்த வந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற சிறு தகவல் கூட படத்தில் இல்லை என்றும் அதனால் படத்தின் உண்மையைத் தன்மை சரியாக வெளிப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர், படத்தின் கதை தாக்குதலின் போது ஓட்டலில் சிக்கிக்கொண்டவர்களை மட்டுமே பேசுகிறது. அவர்களுக்கு சம்பவத்தின் போது வெளியில் நடந்த கதைகள் தெரியாது என்பதால் மற்ற விஷயங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

படம் திரையிட்ட பின் நடந்த கேள்வி- பதில் பகுதியில், இயக்குனர் அந்தோணி மராஸிடம், ‘இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட அமெரிக்காவில் வசித்த பாகிஸ்தானியர் ஹெட்லி பற்றி கூட தகவல் இல்லையே’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்தப் படம் தாக்குதல் நடந்த சம்பவத்தை மட்டுமே பேசுகிறது. அப்போது ஹெட்லி பற்றி வெளியே தெரியவில்லை’ என்று கூறினார். 

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவின் இயக்குனர் அசீம் சப்ரா தனது ட்விட்டர் பதிவில், ‘படம் தீவிரமான ஆக்‌ஷன் படமாக இருக்கிறது. தேவ் படேல், அனுபம் கெர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால், மும்பையில் நடந்த அந்த சோகம் கேளிக்கை விஷயமானது எப்படி? படத்தில், எந்த இடத்திலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடப்படவே இல்லை. இது வெட்கக்கேடானது. ஆனால் படத் தில் தீவிரவாதிகள் உருது மொழியில் பேசுகிறார்கள். இது உண்மையான படமாக இல்லை. இந்தப் படத்தில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் கண்டிப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ள அவர், ஃபெயில் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.