சினிமா

ப்ளூ வேல் விளையாட்டை திரைக்கதையாக்கிய இளம் இயக்குநர்!

ப்ளூ வேல் விளையாட்டை திரைக்கதையாக்கிய இளம் இயக்குநர்!

webteam

ப்ளூவேலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமென அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக கோலிவுட்டில் நல்ல திரைப்படங்கள் வரத்தொடங்கியுள்ளன. அரைத்த மாவையே அரைக்காமல் புதுமுக இயக்குநர்கள் பலர் புதுப்புது கதைக்களத்துடன் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். காலத்திற்கே ஏற்ற கதைகள், அப்போதைய பிரச்னைகளையோ, ட்ரெண்டிங்கையோ கதைக்கருவாக உருவாக்கப்படும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது.  இதன் வரிசையில் சமீபத்தில் உலகையே உலுக்கிய ப்ளூ வேல் கேமை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் புதுமுக இயக்குநர் ரங்கநாதன். இவர் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய விளையாட்டு ப்ளூ வேல். விளையாட்டாக தொடங்கும் இது போகப்போக நம்மை கட்டுப்படுத்த தொடங்கும். விளையாட்டில் சொல்லப்படும் டாஸ்க் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இந்த விளையாட்டை மையமாக வைத்தே இயக்குநர் ரங்கநாதன் திரைப்படம் இயக்கி வருகிறார். 

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய அவர், இன்றைய காலக்கட்டத்தில் பண தேவைக்காக பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் குழந்தைகளுடன் அவர்கள் செலவழிக்கும் நேரம் என்பது குறைந்து வருகிறது. குழந்தைகளும் தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததால் தனிமையில் சோர்ந்து போகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் கவனத்தை ப்ளூ வேல் போன்ற விளையாட்டுகளில் திருப்புகின்றனர். 

ப்ளூ வேல் போல் மோமோ சேலஞ்ச் என்ற விளையாட்டும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான விளையாட்டுகளில் குற்றவாளிகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அதனடிப்படையிலேயே அந்தக் கதைக்கருவை கையில் எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர் இளம் வயது மாணவன் ஒருவன் காணமல் போகிறான். அவன் ப்ளூ வேல் விளையாடிதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதில் இருந்து கதை தொடர்கிறது என்று தெரிவித்தார். மனதளவில் குழந்தைகள் எப்படி இந்த விளையாட்டுக்குள் இழுக்கப்படுகின்றனர் என்பதையும் பெற்றோர்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதையும் இந்தத் திரைப்படம் சொல்லும் எனத் தெரிவித்தார்