முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்கும் உறவினர்களைத் தவறவிடுகிறேன் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் வருத்தமாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் திரைப்படம் 'பிகில்'. இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்தது. இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாதி தயாரித்திருந்தார். இந்தப் படம் தொடர்பான நடந்த வருமானனரிச் சோதனையிலும் இவரது நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. அதனையடுத்து விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பரவி உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிப் போய் உள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ரசிகர்கள் திரையில் வெளியாகும் அவரது படத்தைக் கண்டு உற்சாமகாக துள்ளிக் குதிக்கின்றனர். அந்தப் பதில் அவர், “இந்தப் புகைப்படம் எல்லாவற்றையும் சொல்கிறது. இந்த ஷாட்டை யார் போட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தை விரும்புகிறேன். ரசிகர்களின் மனநிலையை மிகச்சரியாகப் பிடித்துக் காட்டியுள்ளது. எங்கள் ‘பிகில்’ திரைப்படத்தைக் கொண்டாடியதற்கும் அதன் வெற்றியின் ஒரு பகுதியாக இருந்ததற்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மற்றொரு ட்விட்டில், “எனது வேலைகளை, ஹவுஸ்ஃபுல் ஷோக்களை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி தரச் சொல்லித் தரும் அழுத்தங்களை, புதிய பாப்கார்னின் வாசனையை, கைதட்டல், சிரிப்பு மற்றும் ஒரு சிறந்த காட்சியின் போது ஏற்படும் மகத்தான மவுனத்தை இப்படி பலவற்றை தவறவிட்டுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.