திரையரங்கில் 100% அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதம் பற்றி பரிசீலித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 4-ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. உருமாறிய கொரோனா பரவிவரும் இந்நிலையில் இந்த ஆணை குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு மாறாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி வெளியிட்டிருந்த கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அறிக்கையில்கூட திரையரங்குகள் 50% இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை திரும்பப் பெறுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய தலைமுறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.