லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ ஓடிடியில் ரிலீஸாவதாக தகவல் வெளியாகி இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்
விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் வருகிறார் விஜய் சேதுபதி. சிறுவயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா சூழலால் திறக்கப்படாமல் இருந்த தியேட்டர்கள் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திறப்பதாக அரசு அறிவித்தது. எப்போதும் மக்கள் கூட்டத்தால் ஆர்ப்பரிக்கும் தியேட்டர்கள் கொரோனா விதிமுறைகளால் அமைதியாக கிடக்கின்றன. அதேநேரத்தில் பெரிய ஹீரோக்களும் படங்களும் வெளியாகவில்லை.
சமீபத்தில்தான், சூர்யாவின் 'சூரரைப் போற்று' ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்தது. முன்னதாக, 'பொன்மகள் வந்தாள்', 'பென்குயின்' என ஒடிடியில் வெளியான படங்கள் வரவேற்பை பெறாததால், 'சூரரைப் போற்று' படத்தின் மீதும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனால், ஓடிடியில் வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது 'சூரரைப் போற்று'. அதே நேரத்தில் இப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 'மாஸ்டர்' படமும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தகவலால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்
'மாஸ்டர்' படக்குழுவிடம் புதிய தலைமுறை விசாரித்தபோது, ‘மாஸ்டர் உறுதியாக தியேட்டரில்தான் பொங்கலுக்கு வெளியாகப்போகிறது. அதற்கு, அடுத்ததாகத்தான் ஓடிடி தளம். ஆனால், அது நெட்ஃபிளிக்ஸ் அல்ல. அமேசான் பிரைமில் வெளியாகிறது” என்று அழுத்தமாகச் கூறியுள்ளனர்.