நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதன் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், ‘இருபது ஆண்டுகள் முன்னால் இருந்த விஜய் வாழ்க்கையில் ரெய்டு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போதும் ஒன்று பிரச்னை இல்லை. எனவே 20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை வேண்டும்’ எனக் கூறியிருந்தார். அந்த விழாவில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளம் காமெடி நடிகர் தீனா, ‘ஈசிஆர் ரோடு சும்மா இருக்கு என்று யாரும் அடிக்கடி ரெய்டு போவாதீங்க’ என நக்கலாகக் கூறியிருந்தார். அந்தப் பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனிடையே இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கிப் போய் கிடக்கிறது.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் காமெடி நடிகரும் தொலைக்காட்சி காமெடி ஷோ நடிகருமான தீனா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். தற்போது திரைத்துறை முடங்கிப் போய் உள்ளதால் தீனா வீட்டிலேயேதான் இருந்து வருகிறார். ஆகவே அந்த நேரத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை அவர் செய்து வருகிறார். அதன் அடையாளமாகவே அவர் ராமராஜன் பாணியில் வீட்டில் உள்ள பசுவை வைத்து பால் கறக்கும் வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ‘வீட்டில் வேலை பார்த்து எவ்வளவு ஆச்சு’ என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
தனுஷ் இயக்கிய 'பா பாண்டி' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், பிறகு ’தும்பா’ மற்றும் ’கைதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.