இந்தியாவில் இதுவரை வெளிவந்த ஹாலிவுட் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பெற்றுள்ளது.
இந்தியாவில் வெளிவந்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்த திரைப்படம் என்றால் அது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்று கூறலாம். ஏனென்றால் இந்தப் படம் இதற்கு முன் வெளிவந்த அவெஞ்சர்ஸ் மற்றும் டிசி படங்களின் கடைசி முடிவுப் படமாக வெளியாகியது. இப்படத்திற்கு முன்வந்த அவெஞ்சர்ஸ் மூவிகளை பார்க்காமல் நேரடியாக ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை ஒருவர் பார்த்தால் அது புரியாது.
ஆனாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீம்ஸ்களில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெரும் முக்கியத்துவத்தை பெற்ற படமாக ட்ரெண்ட் ஆனாதால், அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டர்களில் கூட்டம் பெருகியது. இதனை ஒரு வியாபார யுக்தி என்று கூறலாம். அத்துடன் இது கோடைக்காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பாக செல்லும் அனைவரும் இந்தப் படத்திற்கு சென்றுவிட்டனர். எனவே படத்தின் வசூல் வேகமாக உயர்ந்துவிட்டது. இதனால் உலக அளவில் இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.8,517 கோடிகளை அள்ளிவிட்டது.
இந்தியாவில் மட்டும் கடந்த 4 நாட்களில் ரூ.225.83 கோடியை வசூல் செய்துள்ளது. படம் வெளியான வெள்ளிக் கிழமை அன்று ரூ.63.81 கோடியும், சனிக்கிழமை 62.14 கோடியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 62.92 கோடியும் வசூல் செய்துள்ளது. இதனால் மூன்று நாட்களிலேயே இந்தப் படம் ரூ.188.87 கோடியை இந்தியாவில் வசூல் செய்துவிட்டது.
அத்துடன் திங்கட் கிழமை வசூலையும் சேர்த்து மொத்தம் ரூ.225.83 கோடி வசூல் செய்ததால், இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெற்றுள்ளது. இந்த 4 நாட்களில் சுமார் 11 மில்லியன் டிக்கெட்டுகள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளது. அதில் ‘புக்மைஷோ’ என்ற செயலி மூலம் மட்டும் சுமார் 5.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தப் படம் சுமார் ரூ.2500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.