vishal pt web
சினிமா

விஷால் புகார் எதிரொலி: மார்க் ஆண்டனி தணிக்கை சான்றிதழுக்கு லஞ்சம் - சிபிஐ வலையில் சிக்கிய மூவர்!

Angeshwar G

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக நடிகர் விஷால் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. மெர்லின் மேனகா, ஜிஜா ராம்தாஸ் மற்றும் ராஜன் உள்ளிட்ட மூவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களும் மற்ற அடையாளம் காணப்படாத மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மும்பை அலுவலக அதிகாரிகளும் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கு சென்சார் சர்டிபிகேட் என அழைக்கப்படும் தணிக்கை சான்றிதழ் கோரியபோது அதற்கு ஆறு லட்சம் ரூபாய் லஞ்சமாக பேரம் பேசப்பட்டதாக நடிகர் விஷால் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தமிழில் ஏற்கனவே வெளியான இந்த திரைப்படத்தை, ஹிந்தியில் வெளியிட தணிக்கை சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே படத்தை தணிக்கை வாரிய குழு திரையிட்டு பார்க்கும் எனவும் மேலும் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் கிட்டும் எனவும் தகவல் அளிக்கப்பட்டதாக நடிகர் விஷால் பேட்டி அளித்திருந்தார்.

ஆறு லட்ச ரூபாய் கொடுத்த பிறகு தணிக்கை சான்றிதழ் எட்டியது எனவும், லஞ்சப் பணத்தை கொடுத்ததற்கு வங்கி பரிவர்த்தனை ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். ஊழலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த அதிகாரி ஒருவரை மும்பைக்கு அனுப்பியது. ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில் தணிக்கை சான்றிதழ் விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

நடிகர் விஷால்

உடனடியாக குற்றம் சாட்டப்பட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் தணிக்கை சான்றிதழ் பெற்றுதர ஏழு லட்ச ரூபாய் பேரம் பேசியதாக சிபிஐ கண்டறிந்துள்ளது. பின்னர் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சப்பனமாகவும் அதைத்தவிர 20000 ரூபாய் ஒருங்கிணைப்பு கட்டணமாகவும் அந்த நபர் கேட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய போது நடிகர் விஷால் யார் லஞ்சம் பெற்றது என்கிற கேள்விக்கு மேனகா என்கிற பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் விஷாலிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது. மெர்லின் மேனகா, ஜிஜா ராம்தாஸ் மற்றும் ராஜன் தவிர அடையாளம் காணப்படாத தணிக்கை வாரிய அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் 6 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் செலுத்தப்பட்டதாகவும் இதில் ஆறரை லட்சம் ரூபாய் உடனடியாக கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் சிபிஐ கண்டறிந்துள்ளது. பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நடிகர் விஷால்

ஆரம்பகட்ட சோதனைகளில் சிபிஐ சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன் என அழைக்கப்படும் திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் இல்லாமல் திரைப்படங்களை வெளியிட கூடாது என்பது அரசின் விதி. விதிகளுக்கு புறம்பாக திரைப்படத்தில் ஏதேனும் அம்சங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அப்படி இல்லை என்பதை உறுதி செய்த பிறகு வாரியம் தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பது நடைமுறை.

மேற்கொண்டு இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணையை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து வருகிறார்கள். சிபிஐ வலையில் சிக்கி உள்ளது இடைத்தரகர்கள் மட்டுமே எனவும், தணிக்கை வாரியத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை கண்டறிவது இந்த வழக்கில் முக்கிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. -- புது தில்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.