மன்சூர் அலிகான் - த்ரிஷா PT Web
சினிமா

“நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தரேன்... அதுக்குள்ள...” - ஆக்ரோஷமாக பேசிய மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் வலுத்த நிலையில் அது குறித்து செய்தியாளர்களிடையே இன்று பேசினார் நடிகர் மன்சூர் அலிகான்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நடிகை த்ரிஷாவை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும், திரையுலகிலும் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்தவகையில் லோகேஷ் கனராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, குஷ்பு உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைதளங்களில் கண்டனமாக தெரிவித்திருந்தனர்.

மேலும் தேசிய மகளிர் ஆணையமும் மன்சூர் அலிகான் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கமும் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்

இப்படி பலத்த கண்டனங்களை எதிர்கொண்டு வரும் மன்சூர் அலிகான், இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னிடத்தில் நடிகர் சங்கம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. 4 மணி நேரம் அவங்களுக்கு டைம் தரேன்” என ஆவேசமாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “மக்களுக்கு என்னை தெரியும். நான் யாரென்றும் தெரியும். 4 ,5 கோடி ரூபாய் செலவு செய்து தற்போது என் புதிய திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த சர்ச்சையால் அந்த திரைப்படமும் வெளியாகாமல் நிற்கிறது. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. இத்தனை காலம் நான் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் இந்த சர்ச்சையை குறித்து என்னிடத்தில் எந்த விளக்கமும் கேட்டோ, நோட்டீஸோ அனுப்பவில்லை.

மன்சூர் அலிகான்

இப்படித்தான் நீதிமன்றத்தில் நீதிபதி விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குகிறாரா? நடிகர் சங்கம் இமாலய தவறை செய்து விட்டது. சரியாக 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்று துறை ரீதியாக இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு எனக்கு கடிதம் தர வேண்டும். அரசியல் ரீதியாக போராடுவதற்கு நான் ஆயுத்தமாகி கொண்டுள்ளேன். எனவே மக்கள் என் சார்பாக நிற்பார்கள்” என்றுள்ளார்.

இத்தோடு மீண்டும் சில சர்ச்சை கருத்துகளையும் ஆவேசமான முறையில் மன்சூர் அலிகான் பேசினார். அவர் பேசிய முழுவதையும், கீழுள்ள இணைப்பில் வீடியோவாக காணலாம்.

முன்னதாக இதுகுறித்து இன்ஸ்டாவில் அவர் பதிவொன்று இட்டிருந்தார். அதன்பிறகே தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் வந்தது. தற்போது சங்கத்துக்கு பதில் தெரிவிக்கும்வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் மன்சூர் அலிகான்.