த்ரிஷா குறித்த அவதூறு பேச்சு வழக்கில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் இன்று நேரில் ஆஜரானார் மன்சூர் அலிகான். முன்னதாக இவ்வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மனுவில் சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் என தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். எனவே அம்மனுவை வாபஸ் பெற்றுவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
மன்சூர் அலிகானின் இச்செயலுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தரப்பில், “நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல. எனவே நீதிமன்ற நேரத்தை வீண்ணடிக்க வேண்டாம்“ என்று கண்டித்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகை த்ரிஷா குறித்த மன்சூரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாமாக முன்வந்து இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், IPC 354(A) – பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற 2 பிரிவுகளின் கீழ் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பினர். ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் இன்று காலை 10 மணி அளவில் ஆஜராகும்படி கூறியிருந்தனர். ஆனால் உடல் நிலையில் பாதிப்பை ஏற்பட்டதால் அவரால் ஆஜராக இயலவில்லை என்று பதிலளித்திருந்தார். பின் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். ஆனால் அதையும் தவறாக கூறியதால், அந்த மனுவையும் வாபஸ் பெற்றார்.
தொடர் சலசலப்பு பற்றி செய்தியாளர்கள் பேசிய அவர், “சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு ஆஜராகிறேன். தலைமறைவாகிற ஆள் நானில்லை” என்று தெரிவித்தார். சொன்னபடி 2:30 மணியளவில் ஆஜரானார் மன்சூர் அலிகான்.
காவல் நிலையத்தில் மன்சூர் அலிகானிடம் காவல்துறையினர் கேள்விகளை முன்வைத்தனர். அதில் இந்த வீடியோவில் பேசியது நீங்கள் தானா என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்சூர், அதில் பேசியது நான்தான். த்ரிஷா அதை தவறாக புரிந்துகொண்டார், எந்த உள்நோக்கம் கொண்டும் நான் பேசவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
குரல் பிரச்னை இருந்ததால் வரமுடியாத சூழல் இருந்தது. அதனால் விளக்கம் கொடுத்திருந்தேன். தற்போது சமூகவலைதளத்தில் நான் தலைமறைவாக இருப்பதாக கருத்து பரவிய நிலையில் நேரடியாக வந்து விளக்கம் அளித்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.