சினிமா

தள்ளிப்போன ரிலீஸ்... எப்போது ரிலீஸாகும் `மன்மத லீலை'? வெளியானது அடுத்த அப்டேட்!

தள்ளிப்போன ரிலீஸ்... எப்போது ரிலீஸாகும் `மன்மத லீலை'? வெளியானது அடுத்த அப்டேட்!

நிவேதா ஜெகராஜா

'மன்மத லீலை' திரைப்படம் இன்று காலை ஷோ வெளியாகாத நிலையில், படம் எப்போது திரைக்கு வரும் என்ற அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

’மாநாடு’ திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மத லீலை’ படத்தினை இயக்கியிருந்தார். நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’, இன்று (ஏப்ரல் 1) முதல் தியேட்டர்களில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திட்டமிட்டபடி இன்று காலை திரையரங்கில் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையாக அதிருப்தியை தெரிவித்துவந்தனர். படத்தின் விநியோகஸ்தர், தயாரிப்பாளருக்கான பணத்தை கொடுக்கவில்லை என்றும் பணம் தொடர்பான சிக்கலால் படம் வெளியாகவில்லை என்றும் சொல்லப்பட்டது. குழப்பங்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து, தற்போது பட வெளியீடு குறித்து படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான `ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட்’ அப்டேட் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அவர்கள், “கடவுள் இருக்கார்! சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, மன்மத லீலை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தாமதம் காரணமாக படம் இன்று மதியம் முதல் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. KDM (திரையரங்கங்களுக்கு கொடுக்கப்படும் சங்கேத குறியீடு), இன்னும் சில மணி நேரத்தில் தியேட்டர்களுக்கு சென்றடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை ஷோவுக்கு படத்துக்கு சென்ற ரசிகர்கள், தங்களின் அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில் இன்றே படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருப்பது அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.