தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள திரையரங்கம் ஒன்று, “நீண்ட இடைவெளிக்கு பிறகு டிக்கெட்டு டிமாண்ட். ரசிகர்களை தியேட்டர் நோக்கி கூட்டி வந்த மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் நன்றிகள்.
உண்மையில், ப்ளூ ஸ்டார், வடக்குப்படி ராமசாமி, லவ்வர், லால் சலாம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருந்த போதும் ஹவுஸ்புல் காட்சிகள் என்பது கனவாகவே இருந்தது.
இந்த வருடத்தில் அயலான் படத்திற்கு தான் இப்படியான டிக்கெட் டிமாண்ட் இருந்தது" தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
இதுதான் இன்றைய தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளின் நிலை இதுதான் என்றே சொல்லலாம். நெல்லை, சேலம், திண்டுக்கல், திருச்சி என பல மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாய் ஓடியுள்ளது. இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்றால் நேற்று தமிழகத்தின் வசூல் கேரளாவையே விஞ்சிவிட்டது. கேரளாவில் நேற்று ரூ.3.43 கோடியும், தமிழகத்தில் ரூ.4.82 கோடி வசூல் ஆனது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டப்பிங் செய்யப்படாமல் நேரடியாக வந்த வேறொரு மொழி படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பது இதுவே முதல் முறை. ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் கதை குறித்து, விமர்சனம் குறித்து தமிழ் ஆடியன்ஸை கவர்ந்தது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
கேரள மாநிலத்தின் கொச்சியில் மஞ்சுமெல் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானல் ட்ரிப் செல்ல திட்டமிடுகிறது. நண்பர்களைத் திரட்டி, வண்டியைப் பிடித்து, நெருக்கியடித்து காரில் அமர, துவங்குகிறது பயணம். எல்லா சுற்றுலாத் தலங்கள் சென்று ஜாலியாக பொழுதைக் கழிக்கிறார்கள். அடுத்ததாக அங்கிருந்து மூணார் செல்ல திட்டம்.
புறப்படும் போது ஒரு நபர் இங்கு ஒரு இடம் மட்டும் நாம் செல்லவில்லை, அது அருமையான இடம் என சொல்கிறார். குணா குகைதான் அது. அட கமல்ஹாசன் நடித்த இடத்தைப் பார்த்தாக வேண்டும் என பரவசமாக கிளம்புகிறார்கள். அங்கு சென்ற பின் நடக்கும் ஒரு சம்பவம், தொடர்ந்து வரும் சிக்கல்கள், அதிலிருந்து இந்த குழு மீண்டனரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.
படத்தில் முதல் ப்ளஸ், நடிகர்களில் இயல்பான நடிப்பு. கிட்டத்தட்ட பத்து பதினைந்து கதாப்பாத்திரங்கள் முக்கியமான ரோல். அதில் தனித்துத் தெரிவது, குட்டன் ரோலில் நடித்துள்ள சௌபின் சாஹிர், சுபாஷ் ரோலில் நடித்துள்ள ஸ்ரீநாத் பாஷி. டூரிஸ்ட் கைடாக வரும் ராமச்சந்திரன், டிபன் சென்டர் வைத்திருக்கும் ரோலில் ஜார்ஜ் மரியான், போட்டோகிராபராக வரும் நபர், காவலதிகாரிகள் எனப் பலரும் மனதில் நிற்கிறார்கள். அடுத்தது இயக்குநர் சிதம்பரத்தின் எழுத்து. இந்தப் படம் மிக எளிமையான ஒரு நேர்கோட்டுக் கதை. அதை முடிந்த வரை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார். நிகழ்காலத்தைத் தொடர்புபடுத்தும் படி, அந்த நண்பர்களில் குழந்தைப் பருவத்தில் நடந்ததை கதைக்குள் சேர்த்திருந்த விதமும் சுவாரஸ்யமாக இருந்தது.
மேலும், கடவுள் நம்பிக்கை இல்லாத சுபாஷிடம், கடவுள் என்பது வெளிச்சம் போன்றது என்ற உரையாடல், பின்பு வேறொரு இடத்தில் கனெக்ட் ஆவது, சிறு வயதில் அவர்கள் விளையாடிய கண்ணாம்மூச்சி ஆட்டம், நிகழ்கால சூழலுக்கு இணையாக இருப்பது என சில டீட்டெய்லிங் சிறப்பு. அதிலும் இந்த மொத்தப் படத்தையும் குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலை கேட்ட கையோடு உட்கார்ந்து எழுதியதைப் போன்ற வகையில், அந்தப் பாடலுக்கான சமர்ப்பணம் போன்று படத்தை உருவாக்கியிருந்தது ரசனை. அதிலும் படத்தின் துவக்கத்தில் லோக்கல் சானல் ஒன்றில் ஒலிக்கும் கண்மணி அன்போடு பாடல், படத்தின் வேறொரு இடத்தில் வரும் போது உண்மையில் கூஸ்பம்ஸ்.
சுஷின் ஷ்யாம் பின்னணி இசை படத்திற்கு தேவையான த்ரில்லையும், மர்மமான உணர்வையும் நமக்கு கடத்துகிறது. ஷைஜூ காலித், அஜயனின் கலை இயக்கமும் படத்திற்கு வலிமை சேர்க்கும் தூண்கள். அந்த குழுவின் தவிப்பை நாம் நம்புவதற்கு இவர்கள் முக்கியமான காரணம். நிகழ்காலத்தையும் - குழந்தைப் பருவத்தையும் இணைத்து படத்தை தொகுத்திருக்கும் விவேக் ஹர்ஷனுக்கு தனி பாராட்டுகள்.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால், கொடைக்கானல் செல்லும் முன்பு வரை, படம் நம்மை கவர ரொம்பவும் போராடுகிறது. மேலும் க்ளைமாக்ஸுக்கு முன்பு வரை நிதானத்துடன் நகரும் கதை சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவை எல்லாம் சேர்ந்துதான் படத்தின் நிறைவில் வரும் உணர்வுகள் நம்மை நெகிழச் செய்கின்றன என்பதும் குறிப்பிட வேண்டியது. மேலும் இது 2006ல் நடந்த உண்மை சம்பவத்தின் தாக்கத்தில் உருவானது என்பதும் ஒரு வியப்பைக் கொடுக்கிறது.
மொத்தத்தில் மலையாள சினிமாவின் survival thriller படங்களுக்கான பென்ச் மார்க்கை உயர்த்தியிருக்கிறது இந்த `Manjummel Boys’. கண்டிப்பாக நல்ல சவுண்ட் சிஸ்டமும், ப்ரொஜெக்ஷனும் இருக்கும் திரையரங்கில் சென்று கண்டுகளிக்க வேண்டிய தியேட்டர் மெட்டீரியல் படம்.
ஆக மொத்தம் மலையாள சினிமாவுக்கு பிப்ரவரி செமயாக நிறைவடைகிறது. 9ம் தேதி வெளியான `Anweshippin Kandethum', `Premalu', கடந்த வாரம் வெளியான `Bramayugam', `Thundu', இந்த வாரம் `Manjummel Boys', `Family' என டபுள் தமாக்காவாக அசத்தியிருக்கிறார்கள். தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்.
இந்தப் படம் துவங்குவதே கண்மணி அன்போடு காதலன் பாடலுடன் தான். அதுவும் அதற்காக ஒரு ஸ்டோரி போர்டில் குணா படத்தின் அந்தப் பாடலுக்காக குகையில் கமல் மற்றும் நாயகி இருக்கும் காட்சிகள் ஓவியமாக உருவாக்கப்படிருந்தது அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. படம் தொடங்கி முதல் பாதியில் அவர்கள் தமிழ்நாடு எல்லைக்குள் வந்தது முதலே அது தமிழ் படம் என்ற உணர்வு தான் இருந்தது. பழனி முருகன் கோயில், கொடைக்கானல் என பழக்கமான இடங்கள் தான் இரண்டாம் பாதி முழுவதும் வருகிறது. ஜார்ஜ் மரியான் போன்ற தமிழின் நடிகர்கள் பலரும் இடம்பாதி முழுவதும் வருகிறார்கள். பெரும்பகுதி தமிழிலேயே பேசுகிறார்கள். மலையாளமும் புரியும் படியாகவே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக குணா குகையும், கண்மணி அன்போடு பாடல் இறுதியில் இணைக்கப்பட்ட விதமும் தமிழ் ஆடியன்ஸ் உடன் கதையை ஒன்றிப்போக வைத்துவிட்டது.