சினிமா

’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்

’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்

webteam

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு நடத்தும் மாபெரும் பெண்கள் சுவர் போராட்டத்தில் இருந்து, விலகுவதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி பிடித்துள்ளனர். சபரிமலைக்குள் பெண்களை நுழையவிடாமல் போராட்டக்காரங்கள் தடுத்ததும், போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் சர்ச்சையை கிளப்பின. 

இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றதீர்ப்பை அமல்படுத்தும், கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கக் கோரி, முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 170 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், ஜனவரி 1 ஆம் தேதி மாபெரும் ’பெண்கள் சுவர்’ போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. காசர்கோடு பகுதியில் இருந்து திருவனந்தபுரம் வரை, சுமார் 10 லட்சம் பெண்கள் ஒன்றாக நின்று, சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழைய ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கேரள முதலமைச்சர் தெரிவித்தார்.

இதில் தானும் பங்கேற்பதாக நடிகை மஞ்சுவாரியர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இப்போது தெரிவித்துள்ளார். 

ஜனநாயக வாலிபர் சங்க பெண் நிர்வாகியால், பாலியல் புகார் கூறப்பட்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ, கே.சசியை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும் என்று எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான சாரா ஜோசப் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அதையடுத்தே மஞ்சு வாரியரும் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியல் தொடர்பான விவகாரங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள் ளதால் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ள மஞ்சு வாரியர், அரசின் திட்டங்களுக்கு எப்போதும் தான் ஆதரவளித்து வருவதாகவும் அது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.