‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் ‘நானே வருவேன்’ படமும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது முதல் பார்க்கும் பக்கங்களில் எல்லாம் ஒரு கேள்வி தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதாவது, தமிழ் சமுதாயத்தின் பெருமையான சோழர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்படும் ஒரு படத்திற்கு போட்டியாக ஏன் ‘நானே வருவேன்’ படத்தை வெளியிட வேண்டும், கொஞ்சம் தள்ளி வைக்கலாமே என்று ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.
குறிப்பாக தெலுங்கில் ‘பாகுபலி’ படம் ரிலீஸ் ஆனபோது மற்ற படங்கள் ஒதுங்கிக் கொண்டதாக குறிப்பிட்டு அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மற்றவர்கள் வழிவிடலாம் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு சார்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்கள் புரமோஷன் வேலைகளில் படுவேகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இருப்பினும், ‘நானே வருவேன்’ பட புரமோஷனை ஒட்டி தாணு அளிக்கும் பேட்டிகளில் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்வி முன் வைக்கப்பட்டு வந்தது. அதற்கு தாணு, “இரண்டு படங்களையும் ஏன் ஒரு போட்டியாக கருத வேண்டும். இரண்டு படமும் ஓடட்டுமே. இரண்டு படங்கள் ஒரேநேரத்தில் வெளியாகி வெற்றியும் அடைந்திருக்கிறது. இரண்டையும் வரவேற்போம்” என்று பொதுவாக கூறியிருந்தார். அத்துடன், தன்னுடைய படத்தின் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் அழுத்தமாக தாணு கூறி வந்தார்.
இந்த நிலையில்தான், புரோமோஷன் நிகழ்ச்சிக்கான பேட்டி ஒன்றில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ள கருத்து வைரல் ஆகி வருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படம் தொடர்பான பேட்டியில் ‘நானே வருவேன்’ என்ற பெயரை சில முறை அழுத்தமாக கூறிப் பேசியுள்ளார். அதாவது, இந்தப் பேட்டிக்கு ‘நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன் எனக் கூறினார். இதில் ‘நானே வருவேன்’ என்பதை அழுத்தமாக அவர் கூறியதே, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக ‘நானே வருவேன்’ வெளியாகியுள்ளதை சுட்டிக் காட்டுவதை போல் இருந்தது. இந்த வீடியோ காட்சியை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனை அடுத்து, பார்த்திபன் காரில் சென்றுகொண்டே பேட்டிக் கொடுப்பது போல் ஒரு வீடியோ வெளியானது. அதில், ஏற்கனவே ‘நானே வருவேன்’ படத்தை குறிப்பிட்டு பேசியது குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார். அதில், தான் செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோரது ரசிகர் என்றும், தானும் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக பேசியுள்ளார். தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பதால் இதனைப் பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

Senjifying D na in his own style @rparthiepan #NaaneVaruveanpic.twitter.com/EtZpGSokfr
— Troll Negativity (@TrollNegativity) September 29, 2022

இந்த விவகாரத்தில் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. திரைப்படம் ரிலீஸ் என்பது ஒரு வணிகம்தான். பெரும்பாலும் வணிகம் சார்ந்ததே. வணிகம் என்பதால் தான் திகட்ட திகட்ட படக்குழு புரமோஷன் செய்து வருகிறது. புரமோஷன் என்ற பெயரில் நடிகையும் இயக்குநருமான சுஹாசினி பேசிய கருத்துக்களுக்கு விமர்சனங்கள் கூட வந்தது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் என்று கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கல்கி எழுதிய நாவலே ஒரு கற்பனைதான். மிகவும் குறைவான அளவே வரலாற்றை பின்புலமாக கொண்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். அதனால், வரலாற்றில் இருந்து எந்த அளவிற்கு எடுத்து கையாளப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படக்குழுவுக்கு வெளியே அப்படியான ஒரு கோரிக்கையை பொதுவான அக்கறையின் அடிப்படையில் வைப்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், படக்குழுவில் இருந்து ஒருவர் முன் வைப்பது சரியான அணுகுமுறையா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.
சோழர்களின் வரலாற்றை பேசுவதால் அதற்காக இயக்குநர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதே சமயத்தில் மற்றொரு படம் வெளியாவதை கிண்டல் செய்வதோ, விமர்சனம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும். மக்களே எல்லாப் படங்களுக்கும் தீர்ப்பு எழுதுவார்கள்.