சினிமா

சோழப் பேரரசின் அதிரடிக்கு தயார் - ‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சோழப் பேரரசின் அதிரடிக்கு தயார் - ‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சங்கீதா

மணிரத்னம் பிரம்மாண்டாக இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் நாளை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் நாவலை மையமாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’  திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இந்திய திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, அஸ்வின், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்தியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், அவரது மனைவி நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும், குந்தவையாக திரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்துள்ளனர். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமமும், சேந்தன் அமுதனாக அஸ்வினும், வானதியாக ஷோபிதாவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்தின் கனவுப்படமான இந்தப் படத்தின் முதல் பாகம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை வர்த்தக மையத்தில் நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.

கோலிவுட்டின் மூத்த நடிகர்களான கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் ஆகிய இருவரில் ஒருவர் விழாவில் கலந்துகொண்டு டீசரை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திப் பதிப்பை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். அதேபோல் மலையாளப் பதிப்பை மோகன்லாலும், தெலுங்கு பதிப்பை மகேஷ் பாபுவும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

10-ம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் அரியணைக்காக நிகழ்ந்த உட்பூசல்களையும், துரோகங்களையும், தியாகங்களையும் அடிப்படையாகக் கொண்டு இளவரசன் அருண்மொழிவர்மன் பேரரசன் ராஜ ராஜனாகப் பதவியேற்று சோழர்களின் பொற்காலத்தை உருவாக்கும் முன் நிகழும் ஒரு சுவாரசியமான சாகசக் கதையாக இந்தப்படம் தயாராகியுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனால் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.