சினிமா

லட்சத்தீவு சர்ச்சையில் சைபர் தாக்குதல் - ப்ரித்விராஜுக்கு ஆதரவாக திரண்ட மலையாள திரையுலகம்!

லட்சத்தீவு சர்ச்சையில் சைபர் தாக்குதல் - ப்ரித்விராஜுக்கு ஆதரவாக திரண்ட மலையாள திரையுலகம்!

நிவேதா ஜெகராஜா

லட்சத்தீவு விவகாரத்தில் நடிகர் பிரித்விராஜ் பதிர்ந்த கருத்துகளுக்கு எதிராக சைபர் தாக்குதல் நடக்க, அவருக்கு ஆதரவாக மலையாள திரையுலகினர் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்தீவு... இந்த வார்ததையால் கேரளா தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. லட்சத்தீவுகளில் புதிய நிர்வாகி விதித்த மாட்டிறைச்சி தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும், இதனை விதித்த பிரபுல் கோடா பட்டேலை மாற்ற வேண்டும் என்றும் கேரளத்தின் உச்ச நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது சமூக வலைதள கணக்கில் #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்து லட்சத்தீவுகள் குறித்து தங்கள் கவலைகளை எழுப்பி வருகின்றனர்.

கேரளாவின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பாஜகவை தவிர, புதிய நிர்வாகி பிரபுல் கோடா பாய் படேலுக்கு எதிராக, அவருடைய சர்வாதிகார ஆட்சி தீவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக ஒருமித்த குரலில் அனைவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதில் முக்கியமானவர் மலையாள நடிகர் பிரித்விராஜ். இவர் லட்சத்தீவு குறித்து ஒரு பெரிய பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில், "6-ம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியிலிருந்து சுற்றுலாவாக முதன்முதலில் லட்சத்தீவுக்கு சென்றேன். அதன்பின் இயக்குநர் சச்சி இயக்கத்தில், 'அனார்கலி' படத்திற்காக அங்கு சென்றுள்ளேன். இந்த முறை இரண்டு மாதங்கள் லட்சத்தீவில் தங்கியிருக்கிறேன். இந்த தருணத்தில் அங்கு நிறைய நண்பர்களும், அழகான நினைவுகளும் கிடைத்தது. இதில் கிடைத்த அனுபவத்தில் என்னுடைய இயக்கத்தில் முதல் படமான 'லூசிஃபர்' படப்பிடிப்பின்போதும் அங்கு சென்றேன். இத்தனை முறை அங்கு செல்வது என்பது அங்குள்ள இனிமையான மக்கள் நடந்தது. அவர்கள் இல்லையென்றால் இது நடந்திருக்காது.

ஆனால், அங்கு தற்போது நடைபெறும் பிரச்னைகள் குறித்து அம்மக்கள் தொடர்ந்து என்னிடம் கூறி வருகின்றனர். தீவுகளில் நடக்கும் பிரச்னைகளை பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் சொன்னதைப்பற்றி எந்தக் கட்டுரையும் எழுதப் போவதில்லை. அவர்கள் சொல்லும் புகார்கள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அது, அங்கு நிகழ்ந்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என்பதுதான். தீவு மக்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை. அங்கு நிலவி வரும் பிரச்னையைப் பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும்" என்று நீண்ட பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

சோஷியல் மீடியாவில் அவர் இட்ட இந்தப் பதிவு வைரலாகியதும், நிறைய எதிர்வினைகளை எதிகொண்டார். இது கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து பிரித்விராஜுக்கு ஆதரவாக, மலையாள திரையுலகம் ஆதவராக நிற்கத் தொடங்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரைப்பட இயக்குனர் ஜூட் அந்தானி ஜோசப், "பிரித்வி எப்போதும் மிகவும் கண்ணியமாகவும், தனது கருத்துக்களைப் பற்றி வெளிப்படையாகவும் பேசும் ஒரு மனிதர். அவரது ஆளுமை குறித்து மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பல் தாக்குதல்களுக்கு தைரியமாக பதிலளித்த அவர் இப்போது நடக்கும் இந்த சைபர் தாக்குதல்கள் அனைத்தையும் பார்த்து சிரிக்கக்கூடும். சமூகம் என்பது பதவிகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே" என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகழ்பெற்ற மலையாள நடிகர் அஜு வர்கீஸ், "யாராவது ஒரு தெளிவான கருத்தைத் தெரிவிக்கும்போது, அதற்கு பதிலாக, சர்ச்சைகள் மாறட்டும், விவாதங்கள் வரட்டும்!" என்று அவருக்கு ஆதவராக பதிவிட்டுள்ளார். மலையாள திரைப்படத் துறையைச் சேர்ந்த மற்ற இயக்குநர்களும், நடிகர்களும் தற்போது பிரித்வி ராஜுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.