அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன்மீதான வழக்கு நீண்ட காலமாக நடத்தப்பட்டது. முக்கியமான வழக்கில் 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கிய, அதேநேரத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் கொண்ட மாற்று நிலத்தையும் வழங்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவந்தது. 4 ஆண்டுகளாக நீடித்துவந்த கட்டுமானப்பணிக்கு பிறகு ஜனவரி 22 ஆம் தேதியான இன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டது. அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டது. இந்தியா முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் முதல் நட்சத்திர பட்டாளங்கள் வரை அயோத்தி நோக்கி படையெடுத்து வந்தனர்.
இதனையடுத்து, ஜனவரி 22ம் தேதியான இன்று அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில், ஸ்ரீ ராமரின் பால பருவ சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை சடங்குகள் உற்சாகமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டிலிருந்து நீதித்துறை, சினிமாத்துறை, விளையாட்டுத்துறை, வணிகம் என பல்வேறு துறையிலிருக்கும் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அனவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு மக்கள் இந்நிகழ்வை கொண்டாடியும், வாழ்த்து பகிர்ந்தும், மத்திய அரசை புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தான் மலையாள நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பலர் அவர்களுடைய சமூக வலைதளங்களில் இறையாண்மை, சமத்துவம், வழிபாட்டு உரிமை மற்றும் சுதந்திர உரிமை குறித்து கூறும் இந்திய அரசியலைப்பின் முன்னுரை பக்கத்தை பதிவிட்டுள்ளனர். இதை பல தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
மலையாள திரையுலகின் நடிகர்கள் “பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், திவ்ய பிரபா, ராஜேஷ் மாதவன், கனி குஸ்ருதி”, இயக்குநர்கள் ”ஜியோ பேபி, ஆஷிக் அபு, கமல் கே.எம், குஞ்சிலா மாசில்லாமணி” மற்றும் பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பல பிரபலமான மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் “இந்திய அரசியலமைப்பின் முகப்புரை” பக்கத்தை புகைப்படங்களாக பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.
அதில், “இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இறையாண்மை, சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை பின்பற்றித்தான் இந்திய மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது” என்ற தெளிவான முன்னுரை அமைந்துள்ளது.
மலையாள நடிகை பார்வதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நமது இந்தியா (OUR INDIA)" என்ற தலைப்பில் இந்திய அரசியலைப்பின் முன்னுரையை பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் ரீமா கல்லிங்கல் "நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் (Justice, Liberty, Equality, Fraternity)" முதலிய சொற்களை பதிவிட்டு அரசியலமைப்பு மதிப்புகளை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் இயக்குநர் கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கும், அதனடிப்படையில் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பை உறுதியளிப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்” என்ற வாக்கியத்தை பதிவிட்டு முன்னுரையை பகிர்ந்துள்ளார்.