இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது, மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தி திரையுலகில் நடிகர், இயக்குனர், படத் தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களுடன் வலம் வருபவர் 63 வயதான மகேஷ் மஞ்ச்ரேக்கர். இவரது இயக்கத்தில், சல்மான் கான் மற்றும் ஆயுஷ் ஷர்மா நடிப்பில் உருவான Antim: The Final Truth திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
முன்னதாக, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது, மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் மகேஷ் மஞ்ச்ரேக்கர் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். கீமோதெரபி சிகிச்சை இடையில்தான் 'Antim: The Final Truth' படத்தின் இறுதிக்காட்சிகளை படமாக்கி நிறைவு செய்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர், புற்றுநோய் பாதிப்பிலிருந்து தாம் முழுமையாக மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''படப்பிடிப்பின் போது, நான் கீமோதெரபியில் இருந்தேன், ஆனால் அது என்னைப் பாதிக்கவில்லை. நோயின் தாக்கம் என்னை அதிகம் பாதிக்காதது ஓர் அதிர்ஷ்டம்தான்.
படப்பிடிப்பு பணிகளை ஆர்வத்துடன் செய்து முடித்தேன். நான் எப்போதும் நேர்மறையாகவே நினைப்பேன். கேன்சர் என்று தெரிவித்தபோது அது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. நான் அதை ஏற்றுக்கொண்டேன். கேன்சரால் பாதிக்கப்பட்ட அனேகம்பேர் மீண்டிருக்கிறார்கள். அதனால், இவ்விஷயம் என்னை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. சல்மான், ஆயுஷ் இருவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் மிகவும் வசதியாக இருந்தேன்" என்றார்.