தனுஷ் pt web
சினிமா

அடங்காத அசுரனாக ராயன்: நிற்காத ஓட்டம்! தெலுங்கு ஸ்டாரிடமிருந்து வந்த பாராட்டு..உற்சாகத்தில் படக்குழு

Angeshwar G

அடங்காத அசுரனாக ராயன்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ராயன். இத்திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் 50 ஆவது திரைப்படம் என்பதால் அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராயன்

இத்திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரைலர்கள் உள்ளிட்டவை வரவேற்பினைப் பெற்றது. திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை புரிந்துவருகிறது.

வசூல் மழை

முதல் 3 நாட்களில் மட்டும் உலகளவில் 70 முதல் 75 கோடிகளை வசூலித்ததாக தகவல் வெளியானது. அதேசமயத்தில் இந்திய அளவில் ரூ.42.65 கோடி வசூலை எட்டியதாக செய்திகள் வெளியானது. முதல்நாளில் ரூ. 13.65 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.13.75 கோடியும், மூன்றாவது நாளில் உச்சமாக ரூ.15.25 கோடியும் வசூலானது. திங்களன்று எந்த திரைப்படத்தின் வசூலானாலும் குறையும் என்ற சூழலில், ராயன் திரைப்படத்தின் வசூலும் ரூ.5.8 கோடியாக குறைந்துள்ளது. மொத்தமாக இந்திய அளவில் ராயன் திரைப்படம் 4 நாட்களில் ரூ. 48.45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்நிலையில்தான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ராயன் திரைப்படத்தைப் பார்த்தப்பின், சிறப்பாக இயக்கி நடித்துள்ளார் என தனுஷையும் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை பாராட்டியுள்ள மகேஷ் பாபு ‘electrifying’ என தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் நன்றி

ராயன் திரைப்படத்தில் தனுஷின் சகோதரராக நடித்துள்ள சந்தீப் கிஷன், மகேஷ் பாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். நீங்கள் திரைப்படத்தை ரசித்ததில் மகிழ்ச்சி என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார். மகேஷ்பாபுவிற்கு ராயன் படத்தின் இயக்குநரும் நடிகருமான தனுஷும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏ சான்றிதழ் வாங்கியும், பண்டிகை காலம் இல்லாமலும் ராயன் பெரிய அளவில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.