இளையராஜா கோப்பு புகைப்படம்
சினிமா

தமிழ் திரையிசையின் ராகதேவன்... இசைக்காற்றால் கட்டிப்போட்ட இசை கடவுள்..! #HBDIlaiyaraaja

மகிழ்ச்சியில் இருப்போருக்கு இவர் கொண்டாட்டம். சோகத்தில் இருப்போருக்கோ இவர் ஆறுதல். தனிமையில் இருப்போருக்கு இவர்தான் வழித்துணை.

PT WEB

இசையால் ஒருவரை என்ன செய்துவிட முடியும்..? கடந்த கால துயரங்களை மறக்க வைக்க முடியும். கடலின் தூரத்தையும் நொடியில் கடக்க வைக்க முடியும். இப்படி, எத்தனையோ மாயங்களையும், மாற்றங்களையும் நிகழ்த்தும் இசைக்கு, ராக தேவனாக இனிமை சேர்த்திருப்பவர் இளையராஜா. அவர் தனது 80வது அகவையில் இன்று அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இளையராஜா

பிரபஞ்சப் பெருவெளியில் ஆயிரம் நட்சத்திரங்களுக்கு இடையே ஒளிவீசும் ஒற்றைச் சூரியனைப் போல், தமிழ் திரையுலகில் மங்காமல் மின்னிக் கொண்டிருப்பவர், இசையமைப்பாளர் இளையராஜா. மகிழ்ச்சியில் இருப்போருக்கு இவர் கொண்டாட்டம். சோகத்தில் இருப்போருக்கோ இவர் ஆறுதல். தனிமையில் இருப்போருக்கு இவர்தான் வழித்துணை.

தமிழ் மக்கள் வாழ்வில் எல்லா இன்ப துன்பங்களையும் தன் இசையால் நிரப்பியிருப்பவர், இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் இருந்து புறப்பட்ட இந்த இசை எக்ஸ்பிரஸ், குறையாத வேகத்தோடு இடைநில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

1976ஆம் ஆண்டு, மச்சான பாத்தீங்களா எனும் பாடல் மூலம் தமிழ் மக்களின் மனதை மயக்கிய இளையராஜா, 40 ஆண்டுகளைக் கடந்து MODERN LOVE CHENNAI வெப் சீரிஸ் மூலம் MODERN இசையை கொடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இளையராஜா

மொழி புரியவில்லை என்றாலும், தமிழ் மக்கள் இந்தி சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது, மண் மனம் வீசும் இசை மூலம் தமிழிசையை, தன் ஆர்மோனியத்தின் மூலம் எட்டுத்திக்கும் ஒலிக்கவைத்தவர், இளையராஜா. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால தமிழ் சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்த மாபெரும் கலைஞன்.

பாடல் எழுதுவதில் கண்ணதாசன் ஒரு ரகம் என்றால், வாலியும், வைரமுத்துவும் வேறொரு தளம் எனச் சொல்லலாம். இவர்கள் தொடங்கி லேட்டஸ் ட்ரெண்டில் இருக்கும் இளம் பாடலாசிரியர்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் ஆர்மோனியப் பெட்டி, இன்றும் இளமையாகவே இருக்கிறது.

இயக்குநர் யாராக இருந்தாலும் சரி, படம் எப்படி இருந்தாலும் சரி. அந்த படைப்பை தன் இசையால் உயிரூட்டி ரசிகர்களுடன் உரையாட வைத்துவிடுவதுதான் ராஜாவின் ஸ்பெஷல். இதற்கு, பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே.பாலச்சந்தர், எஸ்.பி. முத்துராமன், மணிரத்னம், வெற்றிமாறன் என பல இயக்குநர்களின் படைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம்.

இசைஞானி இளையராஜா

ஒரு படத்தில் இசை என்பது பாடல்களோடு முடிந்துவிடுவதல்லை. பின்னணி இசை என்ற மற்றொரு தளமும் அதில் அடங்கும். சுமாராக இருக்கும் படங்களைக் கூட தன் பின்னணி இசையால் முன்னணிக்கு கொண்டுவந்து வெற்றிநடை போட வைத்தவர் இளையராஜா. ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களுக்கு ஹிட் படங்களைக் கொடுத்த இளையராஜா, தமிழ் மட்டுமின்றி பிற மொழி சினிமாவிலும் இசை ஹீரோவாகவே இருக்கிறார்.

5ஜி தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், இவரின் பழங்காலப் பாடல்களை எல்லாம் இன்ஸ்டா ரீல்ஸ்களாக்கி இசை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்திருக்கிறார். லண்டனில் சிம்ஃபொனி இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை இவரையே சேரும்.

இளையராஜா

5 முறை தேசிய விருது, கலைமாமணி, பத்மபூஷண், பத்மவிபூஷன் என இசைக்காக வாங்கிய விருதுகள் எல்லாம், இளையராஜாவின் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞன். காலமாற்றத்தால் சினிமா எத்தனை மாற்றங்களைக் கண்டாலும், இளையராஜா எனும் ஒற்றை ஆளுமைக்கான இடம் மட்டும் என்றும் தனித்துவமானது. தமிழ் திரையிசையை இரண்டாக பிரித்தால் அதில் இளையராஜாவின் இசைதான் காற்று முழுவதும் கலந்திருக்கும். அது என்றென்றைக்கும் அவரின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

- புனிதா பாலாஜி