நடிகர் தனுஷ் வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி, நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக, நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 6 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என முடிவுக்கு வரவில்லை. தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியும் விதமாக, கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது. ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறை நடுவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், "தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்களும் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. பதிவு எண் ஏதுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும், பிறப்புச் சான்றிதழை கருத்தில் கொள்ளாமல், வழக்கு தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும்.
ஆகவே தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.