தமிழ்நாட்டில் தயாராகும் பாரம்பரிய பொங்கல் உணவிற்கு நான் மிகப் பெரிய ரசிகை என்று ‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘மதுரவீரன்’. இதனை முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தை நாயகி மீனாட்சி பகிர்ந்து கொண்டிருக்கிறார். “ நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை ’மதுரவீரன்’ திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் முத்தையாவுக்கு நன்றி. அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர்தான். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முகத் திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.
கதாநாயகன் சண்முகபாண்டியன் எளிமையானவர். மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாகப் பேச எனக்கு உதவியவர் அவர்தான். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் என்றால், விஜயகாந்த்தும் பிரேமலதாவும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியதுதான். என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது.
என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா. தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் எனக்கு நிறைய கற்று தந்துள்ளது. கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாட்டு பொங்கலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை” என்றார் ’மதுரவீரன்’ நாயகி மீனாட்சி.