சினிமா

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்

webteam

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையேயான விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய இடத்தை, ஸ்டுடியோ நிர்வாகம் தர மறுப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இளையராஜா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் ஸ்டுடியோ நிர்வாகம் இடத்தை தர மறுப்பதாக கூறப்படுகிறது. இடத்திற்கு ஏற்ற வாடகை தொகையை தருவதாக இளையராஜா தெரிவித்த போதும், பிரசாத் ஸ்டுடியோ சம்மதிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அதில், இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளதாக இளையராஜா தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையேயான விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.