சினிமா

ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி... மகிழ்ச்சியில் மாதவன் போட்ட போஸ்ட்!

ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி... மகிழ்ச்சியில் மாதவன் போட்ட போஸ்ட்!

நிவேதா ஜெகராஜா

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வந்திருந்தார் நடிகர் மாதவன். விஞ்ஞானியான நம்பி நாராயணன், நாசா வேலையை உதறியபின், நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டதை மையமாக வைத்து இப்படத்தை நடிகர் மாதவன் எழுதி, இயக்கி நம்பி நாராயணனான நடிக்கவும் செய்திருந்தார்.

படத்தின் மீது பலதரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்தையும் கடந்து இந்திய சினிமாவில் முக்கிய படமாக மாறியது. இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி படம் ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் மாதவன் இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அதில் அவர் “அதிகாரபூர்வமாக ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட் படம் ஷார்ட்லிஸ்ட் ஆகியுள்ளது. கடவுளுக்கே பெருமை! பார்ப்போம்” என்றுள்ளார்.

இன்று காலைதான் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருது கிடைத்தது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று குலோடன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தியாவே பெருமை கொள்ளும் தருணமாக அது அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய படங்கள் பல தளங்களிலும் வெற்றி பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் திரைக்கலைஞரக்ளுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது.

முன்னதாக நேற்றைய தினம் பாலிவுட் பாட்சா என்றழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான், `ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றால், அதை தன்னிடம் ஒருமுறை தருமாறும், அதை தான் ஒரேயொரு முறை தொட்டு பார்க்க வேண்டும்’ என்று அப்பட நாயகர்களில் ஒருவரான ராம்சரணிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதற்கு ராம்சரணும், “நிச்சயமாக சார். விருது பெற்றால், அது இந்தியா சினிமாவினுடையது” என பூரித்திருந்தார்.