சினிமா

அமெரிக்காவில் ஒளிர்ந்த மாதவனின் ‘ராக்கெட்ரி :நம்பி விளைவு’- ரசிகர்கள் குஷி

அமெரிக்காவில் ஒளிர்ந்த மாதவனின் ‘ராக்கெட்ரி :நம்பி விளைவு’- ரசிகர்கள் குஷி

சங்கீதா

மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர், அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் டிஜிட்டல் விளம்பரப் பலகையில் வெளியாகியுள்ளது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில் படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். அப்போது அவர் சந்தித்த பிரச்னைகளை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமானது.

ஏற்கனவே இந்தப்படத்தின் ட்ரெய்லர், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையடுத்து படத்திற்கான புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு பலரின் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையான, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பரப்பட்டது. அப்போது நடிகர் மாதவன் மற்றும் விஞ்ஞானி நம்பிநாரயணன் ஆகியோர் அங்கிருந்தனர். அவர்களுடன் அங்கிருந்த மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். நடிகை சிம்ரன், மாதவனுக்கு ஜோடியாக இந்தப் படத்தின் மூலம் 3-வது முறையாக இணைந்துள்ளார். அமெரிக்காவில் படத்தை புரேமோஷன் செய்வதற்காக அங்குள்ள நகரங்களுக்கு 12 நாட்கள் படக்குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும் டெக்சாஸ் மாநிலத்தின் ஸ்டாஃபோர்ட் நகரம், ஜூன் 3-ம் தேதியை நம்பி நாராயணன் தினமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.