Maaveeran Poster  Twitter
சினிமா

இரண்டாவது வாரத்திலும் பட்டையை கிளப்பும் 'மாவீரன்'... ரூ.100 கோடியை நோக்கி முன்னேறும் வசூல்வேட்டை!

Justindurai S

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Maaveeran

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவன் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன். இப்பபடத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ‘மாவீரன்’ 9 நாள் முடிவில் வசூலித்துள்ள வசூல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வெளியான 9-வது நாள் முடிவில் உலகம் முழுவதும் கிட்டதட்ட ரூ.75 கோடியை 'மாவீரன்' வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) இரண்டாவது வாரத்தைத் தொட்ட 'மாவீரன்', அன்று மட்டும் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வார இறுதிக்குள் இப்படம் வசூலில் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'மாவீரன்' படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ''இந்தப் படத்திற்கு வெற்றி கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது'' என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொலை, அநீதி, சத்திய சோதனை, பாபா ப்ளாக் ஷிப் உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த போதும் மாவீரன் படத்திற்கு திரையரங்குகளில் காட்சிகள் குறைவில்லாமலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஃபேமிலி ஆடின்ஸை மாவீரன் படம் கவர்ந்ததும்தான் என்று சொல்லப்படுகிறது.