சினிமா

சர்வதேச ரியாலிட்டி ஷோவில் கலக்கிய 'மாரி' பாடல்

webteam

தனுஷ் நடித்த மாரி படத்தின் டைட்டில் பாடல், பிரிட்டனில் நடத்தப்படும் 'காட் டேலண்ட்' என்ற நடன ரியாலிட்டி ஷோவில் இடம்பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் நடுவர்களுக்காக வீடியோ வழியாக மும்பையைச் சேர்ந்த நடனக்குழுவினர், மாரி படப்பாடலுக்கு அசத்தலாக அக்ரோபேட்டிக்ஸ் மற்றும் ஸ்டைலாக நடனமாடி கலக்கியுள்ளனர்.

இதுபற்றி இயக்குநர் பாலாஜி மோகன் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மும்பை இளைஞர்களின் நடனத்தை கில்லர் பர்ஃபாமென்ஸ் எனப் பாராட்டியுள்ள அவர், அந்தப் பதிவை அனிருத் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான மாரி படத்தில் வரும் "மாரி தர லோக்கல்" என்ற பாடலை தனுஷ் எழுதி அனிருத் இசையில் அவரே பாடியிருந்தார்.

ஆக்சன் காமெடி படமாக வெற்றிபெற்ற மாரி படத்தில் முதலில் வந்த அந்தப் பாடல், தனுஷின் கதாபாத்திரத்தை விளக்குவதாக அமைந்திருந்தது. அந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்த மும்பை நடனக்குழுவினர் பிரமிடு உள்ளிட்ட நவீன பாணியில் நடனமாடி நடுவர்களைக் கவர்ந்துள்ளனர்.