நடிகர் சிம்பின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ‘மாநாடு’ படத்தின் வசூல் குறித்த தகவலை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. டைம் லூப் திரைக்கதையில் உருவான இந்தப் படம் ரசிர்களுக்கு புரியும் வகையில் காட்சிகள் இருந்ததால், பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்த நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர், பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை ரிச்சர்டு எம் நாதன் மேற்கொண்டிருந்தார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை கவனித்து இருந்தார்.
இந்தப் படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் உண்மையான வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘மாநாடு’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் என்றும் தெரிவித்துள்ளதுடன், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.