சினிமா

’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்!

’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்!

webteam

ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், திரைப்படமாக எடுக்கக் கொடுக்கப்பட்டிருந்த தனது ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பி கேட்டுள்ளார் கதாசிரியரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர்

பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தைத் தழுவி ’ரெண்டாமூழம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகிறது என கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார் என்றும் படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. பீமனின் பார்வையில் மகாபாரதத்தைச் சொல்வது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி படத்தை தயாரிக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

 முதல் பாகம் 2018ஆம் ஆண்டு செப்டம்பரிலும் 2வது பாகம் 2020ஆம் ஆண்டும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படம் உருவானால், இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டப் படமாக கருதப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை தனக்கு திரும்ப தருமாறு கதாசிரியர் வாசுதேவன் நாயர் கேட்டுள்ளார்.

‘மூன்று வருடத்துக்குள் இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்றுதான் ஒப்பந்தம் போட்டோம். தற்போது 4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்புத் தொடங்கும் நிலையில் இல்லை. ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்கிறேன். தரவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது, ’இப்போது ’ஒடியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். இதில் பிசியாக இருப்பதால், மகாபாரதம் படம் தொடர்பாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வாசுதேவன் நாயரிடம் தெரிவிக்கவில்லை. விரைவில் அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.