சினிமா

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு

webteam

பிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன், எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு வில்லனாக நடித்த நம்பியார், தனது 60 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 89. அவரது நூற்றாண்டு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நாளை நடக்கிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசை அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் டிஜிபியும் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் சிறப்பு ஆலோசகருமான விஜயகுமார் ஐபிஎஸ் உட்பட பலர் பங்கேற்கிறார்கள்.

விழாவில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் சூர்யா உருவாக்கியுள்ள, நம்பியாரின் வாழ்க்கை வரலாறைக் கொண்ட 30 நிமிட ஆவணப்படம் திரையிடப்படுகிறது. 

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.