தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்துவரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தமிழ் திரைப்படங்களிலும் பல நல்ல பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் மனதை வருடச்செய்யும் “கடவுள் தந்த அழகிய வாழ்வு, Feel My Love, நீல வானம் நீயும் நானும், ஆகாயம் இத்தனை நாள், மண்ணிலே மண்ணிலே, உன் பார்வையில்” முதலிய செவிகள் கவர்ந்த பாடல்களை கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாடலாசிரியர் பழநிபாரதி, மாயாவி படத்தில் இடம்பெற்ற “கடவுள் தந்த அழகிய வாழ்வு” பாடல் உருவானவிதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசிய பாடலாசிரியர் பழநிபாரதி, கடவுள் தந்த அழகிய வாழ்வு பாடல் உருவான போது என்ன நடந்தது என்று பேசியுள்ளார்.
பாடல் குறித்து பேசியிருக்கும் அவர், “தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த அந்த பாடலுக்கான வரிகளை எழுத, நான் என்னுடைய பாடல்கள் எழுதும் அறையில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த பாடலுக்கு நான் முதலில் எழுதிய வரிகள் ’மனதில் ஆடும் ஆசைகள் கோடி’. அந்த வரிகளை நான் எழுதிய போது, என் நாற்காலி திடீரென ஆட ஆரம்பித்த உணர்வு, என்ன டா என்று பார்த்தால் அறையில் இருந்த என் தந்தையின் புகைப்படமும் ஆடுது, தண்ணீர் பாட்டிலில் உள்ள நீர் மட்டும் ஆடுது, டெலிபோனின் ஒயர் மட்டும் தனியா ஆடுது. என்ன நடக்குதுனு யோசிக்குறதுகுள்ள எல்லாரும் வந்துட்டாங்க, அன்னைக்கு தான் சுனாமி வந்த நாள் 2004 டிசம்பர் 26.
ஏதோ பெரிய குற்றம் நடந்த மாதிரி அந்த பாடல் எழுதும் எண்ணமே இல்லாமல், தயாரிப்பாளரிடம் போன் செய்து இன்றைக்கே இந்த பாடலை எழுதனுமா என்று கேட்டேன். ஆமாம் எழுதி கொடுத்துடுனு சொன்னாங்க, சுனாமி காட்சிகளை எல்லாம் பார்த்த பிறகு என்னுடைய எண்ணமே மாறிப்போனது. அப்போது தான் “கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு” என வரிகளை மாற்றி எழுதினேன். அந்த வரிகள் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அற்புதமான பாட்டாக வந்தது.
இந்த பாட்ட இப்பகேட்டாலும் எல்லாரும் அழவைக்குற பாட்டு, ஆறுதல் சொல்ற பாட்டு, மனதை சமநிலை படுத்துற பாட்டு, சாந்தப்படுத்துகிற பாட்டுனு சொல்லுவாங்க. 20 வருடம் கடந்தும் இந்த பாடல் இவ்வளவு கொண்டாடப்படுகிறது என்றால் அது என்னுடைய வரிகள் மற்றும் அந்த பாடலில் பொதிந்துள்ள அர்த்தம் மட்டுமில்லை, அதற்கு இசையின் மூலம் உயிரூட்டிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காரணம். அந்த பாட்ட பதிவுபண்ணும் போது, அவரின் தம்பி அழுதுட்டாரு. அந்த பாடலை பாடிய பாடகி என்னுடைய வாழ்வும் இப்படித்தான் இருந்தது என ஒரு பேட்டியில் கூறினார். இப்படிப்பட்ட அற்புதமான பாடலை கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து
களை கூறிக்கொள்கிறேன்” என்று வீடியோவில் பேசியுள்ளார்.