லப்பர் பந்து web
சினிமா

‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்..’ லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!

Rishan Vengai

பெரிய ஆரவாரம், ப்ரமோஷன்கள் எதுவும் இன்றி கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியான 'லப்பர் பந்து' திரைப்படமானது, ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. திரையரங்கில் குறைவான ஸ்க்ரீன்களுடன் வெளியான இத்திரைப்படம், தற்போது ரசிகர்களின் பெருமித்த ஆதரவால் மெயின் ஸ்ட்ரீம் திரைப்படமாக திரையரங்கில் மாறியுள்ளது.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலசரவணன், ஜென்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லப்பர் பந்து

கிரிக்கெட்டை சார்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், நடிகர் சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சாதாரண திரைப்படமாக திரையரங்கில் வந்து தற்போது அதிகப்படியான ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவரும் லப்பர் பந்து திரைப்படம், வெளியான 3 நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லப்பர் பந்து

இந்நிலையில் படத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ”நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுதான் விஜயகாந்துக்கான உண்மையான ட்ரிபியூட் என ரசிகர்கள் சிலாகத்துவரும் நிலையில், படத்தில் ஏன் அந்த பாடல் இடம்பெற்றது என்ற கேள்விக்கு இயக்குநர் பதிலளித்துள்ளார்.

‘நீ பொட்டு வச்ச தங்க குடம்..’ பாடல் இடம்பெற்றது ஏன்?

'லப்பர் பந்து' படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் ரசிகராக தினேஷ் நடித்துள்ளார், அவருக்கான பில்டப் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த பொன் மனச்செல்வன் படத்தில் இடம்பெற்ற "நீ பொட்டு வச்ச தங்கக் குடம்" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பனை மரத்தவிட ஹைட்டாக சிக்ஸர் அடிக்கக் கூடிய ஆள் ’கெத்து’ என தினேஷை காட்டும் காட்சியில், விஜயகாந்தின் ’நீ பொட்டுவச்ச தங்கக் குடம்’ பாடல் ஒலிக்க அரங்கமே அதிர்கிறது. இந்த காட்சியமைப்பை எதிர்பாராத ரசிகர்கள் மகிழ்ச்சியில் இதை கொண்டாடிவருகின்றனர்.

லப்பர் பந்து

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த லப்பர் பந்து குழு படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டது. அப்போது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிடம், திரைப்படத்தில் விஜயகாந்த் படத்தின் பாடல் இடம்பெற்றது குறித்து கேட்கப்பட்டது.

லப்பர் பந்து

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “நாம் எல்லோருமே விஜயகாந்தின் ரசிகர்கள்தான், ஆனால் என்னையும், தினேஷையும் பொறுத்தவரையில் இருவருமே விஜயகாந்த்தின் மிகப்பெரிய ரசிகர்கள். அதிலும் நான் அவருடைய தீவிர ரசிகன். நான் முதல் படம் எடுத்தால் விஜயகாந்த் சாரை கொண்டாடணும் என்று நினைத்தேன், அதனால்தான் என் லப்பர் பந்து படத்தில் அவரை கொண்டாடியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

லப்பர் பந்து படத்தில் மேலும் பல விஜயகாந்த் பாடல்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது!