Lover movie pt desk
சினிமா

ஒரே பழக்கம் ஆனா இருவித பார்வை; எளிய மனிதர்கள் மட்டுமே ஒழுங்கீனமானவர்களா? Lover-ல் இதுவும் ஒரு கோணம்!

Lover திரைப்படம், ஒரு காதல் பிரிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது இந்த படத்தின் சிறப்பு. கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகத்தில் காதலின் பிரிதல் பற்றி மட்டும் இந்த படம் பேசியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

தமிழரசன் தனசக்தி

ஆண்களிடம் இருக்கும் Toxic குணங்களை அடையாளப்படுத்தும் முயற்சியை நெருக்கமாக கையாண்டிருக்கிறது Lover திரைப்படம். மணிகண்டன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் மேக்கிங் நம்மையும் கதாநாயகி சந்திக்கும் அழுத்தத்திற்குள் இருக்க வைத்தது. ஒரு கட்டத்தில்,"அந்த பொண்ண விட்டு போயிடேன்பா" என்று பார்வையாளர்கள் நினைக்கும்படி படத்தின் போக்கு அமைந்திருக்கிறது. அந்தளவிற்கு Intense ஆக படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

Lover movie

இந்த திரைப்படம் ஆணாதிக்கத்தை ஒரு மேட்டிமைத்தனத்துடனும், அதை ஒரு வர்க்கத்தோடு தொடர்புபடுத்தி மட்டும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. அது தொடர்பான விமர்சனத்தை முன்வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. Toxic Lover மணிகண்டனுக்கும், அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் நாயகிக்கும் இடையே இருக்கும் முரண்பாடு என்பது அவர்களின் வாழ்க்கைச் சூழலோடு தொடர்புடையது.

மணிகண்டனோ சரியான வேலை இல்லாமல் தொழில்தொடங்கும் எண்ணத்தில் காலத்தில் கரைந்து கொண்டிருக்கும் ஒரு மிடில் க்ளாஸ் இளைஞன். அவன் குடும்ப பின்னணியில் இருந்து கவனித்தால் தொழில், காதல் குடும்பம் என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே சிந்திக்கப் பழகிய இளைஞன் என்பது தெரியவரும். அவனுடைய அம்மாவின் எதிர்பார்ப்பும் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்தால் போதும் என்ற அளவில்தான் இருக்கும். இந்த இருவேறு வாழ்க்கை முறைதான் காதலியை தன்னுடனே தனக்கானவளாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாயகனுக்கும், காதலைக் கடந்து வாழ்க்கையின் இதரவிஷயங்களை நோக்கியும் பயணிக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாயகிக்கும் தருகிறது. ஆக இவைதான் பிரச்னை.

Lover movie

மணிகண்டனின் குடும்பம், நண்பர்கள் என்று எல்லாமே கீழ்மை எனப் பார்க்கும்படியாகவே சித்தரித்திருக்கிறார்கள். நிரந்தர வேலையும் இல்லை. கௌரி ப்ரியாவிற்கான சூழல் அப்படி இல்லை. மணிகண்டனைக் காட்டிலும் மேம்பட்ட வாழ்க்கைச் சூழல், நண்பர்கள் வட்டம், வேலை என்றிருக்கிறார். நிறத்தில் இருந்தே அந்த வேறுபாட்டை காணலாம். மணிகண்டன் கருப்பு நிறத்துடைய மனிதர். நாயகியோ அவரது நண்பர்களோ அப்படி இல்லை. ஆரம்பக்காட்சியிலே வெற்றுடம்புடன் மணிகண்டனை பதிவு செய்துவிட்டு அடுக்கடுக்காக வரும் சித்தரிப்புகளை பார்க்கலாம்.

மணிகண்டன், கௌரி ப்ரியா என இருவருக்குமே குடிக்கும் பழக்கம் இருக்கும். இருந்தபோதிலும் மணிகண்டனுடைய குடிபழக்கத்தை ஒரு மூர்க்கத்தனமாக காட்சிப்படுத்தி அவரை ஒரு வெறுப்பூட்டும் கதாப்பாத்திரமாக சித்தரிக்கிறார்கள். இந்த சித்தரிப்பு அவ்விருவரின் வாழ்க்கை படிநிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. குடியில் தொடங்கி கஞ்சா வரை மணிகண்டன் செய்யும் அத்தனையையும் அவர்களும் செய்கிறார்கள். ஆனால் மணிகண்டன் கதாபாத்திரமான அருணின் பழக்கத்திற்குப் பின்னால் திட்டவட்டமாக அவனது பொருளாதாரப் பின்னணியையும் சேர்த்து அமைக்கிறார்கள். அந்த இடம்தான் விமர்சிக்க வேண்டியது. பணக்காரர்களின் குடிப்பழக்கத்திற்கும் சாதாரணமானவர்களின் குடிப்பழக்கத்திற்கு சமூகம் கொடுக்கின்ற மதிப்பீடு. ஒரு சாதாரண தொழில் செய்பவர்கள் குடிப்பழக்கத்திற்கு நமக்கு ஏற்கனவே இருக்கும் Image ஐ இன்னும் நவீனமாக்கியதாகத்தான் இதை புரிந்துகொள்ள முடிகிறது.

Lover movie

நாயகியின் நண்பர்கள் கஞ்சா புகைத்துப் பார்ப்பதை ஒரு அட்வென்ச்சரஸாக பேசுவார்கள். அதில் எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்காமல், கஞ்சா புகைக்கும் அருணை வேறுவிதமாக அணுகுகிறார்கள். கஞ்சா வாங்கச் செல்லும் கதாநாயகி, கஞ்சா விற்பவனுடன் அருண் இருப்பதை அருவருப்பாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண்! ’கஞ்சா வித்துட்டு சுத்திட்டு இருக்க’ என்று ஒரு வசனம் வரும். ஒரு சார்பாக பிரச்னையை எடை போடுவதை இந்த காட்சியில் இருந்து விளங்கிக்கொள்ளலாம்.

அடுத்தது மணிகண்டன் வீட்டுக்கு, தன் காதலியை கூட்டிச்சென்றிருப்பார். இப்போது அந்த வீட்டை கவனியுங்கள். குடி போதையில் தள்ளாடி வரும் அப்பா, வீட்டில் ஒரு பெண் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அசிங்கமாகத் திட்டுவார். நாயகனும் அவரது அம்மாவும் அவரை இழுத்து உள்ளே தள்ளிவிட்டு அந்தப் பெண்ணை சாப்பிட சொல்லுவார்கள். இப்படி நாகரீகம் இல்லாமல் இருப்பவர்களாக, பொதுவாக மேட்டிமைத்தனமானவர் கொச்சையாக உருவகப்படுத்தும் Low Class Behavior என்பதை காட்சிப்படுத்தும் விதமாக அந்தக் காட்சி அமைந்திருக்கும். ’இப்படியொரு வீட்ல எப்டிமா வாழுவ.. அப்பனும் குடிகாரனா இருக்கான்மா’ என்ற சித்திரத்தை அது பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறது.

நாயகி தரப்பு போதைப்பழக்கம் பிரச்னைக்குரியது இல்லை என்றுதான் காட்சிகளை நகர்த்துகிறார்கள். அதோடு விட்டார்களா என்று பார்த்தால் நாயகனின் அப்பாவிற்கு திருமணத்தை மீறிய ஒரு உறவு என்பது வரை நீட்சியடைகிறது. ஒருவகையில் மணிகண்டனின் கதாபாத்திரம் Toxic ஆக இருப்பதற்கு ஒரு பின்கதை கொடுக்க விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்தப் பின்கதைக்குப் பின்னால் ஒரு மேல்தட்டுப் பார்வை இருப்பதை கவனிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆணாதிக்கம் என்பது பொதுவாக சமூகத்தில் இருப்பதுதானே தவிர அது ஒரு வர்க்கத்திக்கான குணம் கிடையாது. ஒப்பீட்டளவில் பார்த்தாலும் எளிய மனிதர்களிடம் கணவன் - மனைவி உறவில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருக்கும். அதுவும் ஒப்பீட்டளவுதான். பொதுவாக சமூகத்தில் ஆணாதிக்கத்தன்மை என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்தப்பார்வையில் இருந்து விலகி ஒரு சார்புடன் அதனை காட்சிப்படுத்தியதுதான் தான் இங்கு பிரச்னை.

Lover movie

ஆனால் நாயகியின் உலகத்தில் இருப்பவர்கள் Perfume விளம்பரத்தில் வரும் ஆண்களைப்போல் Neat and Clean. ஒருவேளை நாயகியுடன் வேலை செய்பவர்கள் நாயகியின் குடும்பத்தைப் பார்ப்பதுபோன்ற காட்சி இருந்திருந்தால், நாயகியின் குடும்பம் நாகரிக மொழி பேசுபவர்களாகவும் வீட்டின் சூழல் பளிச்சென்று உயர்தர அடுக்குமாடி வீடாகவும்தான் காட்டப்பட்டிருக்கும்.

கோகர்ணா சுற்றுலாவில் ஒரு காட்சி. மணிகண்டன் நாயகியின் நண்பர்களோடு குடிப்பார். எல்லாரும் நல்ல போதையில்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதோவொரு மேற்கத்தியப் பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது மணிகண்டன் ஒரு பாடலைப் போடுவார். அந்தப் பாடல், அவர் தேர்ந்தெடுக்கும் பாடல் ஆட்டமுறை என எல்லாம் சாதாரண மக்கள் வாழ்க்கையையும் ரசனையையும் பிரதிபலிக்கும். பாடலின் ஆரம்பத்தில் ஒருவித முகச்சுளிப்புடன் இருக்கும் நாயகியின் நண்பர்கள் பிறகு அவர்களும் இணைந்து ஆடுவார்கள். அதிலும் அவர்களின் ரசனை மேட்டிமைத்தனமானது என்றிருப்பது பளிச்சென்று தெரியும்.

அங்கே மணிகண்டனுடனேயே அமர்ந்து குடிக்கும் நாயகியின் நண்பன், பேச்சுக்கூட குழறாமல் இருப்பார் கடைசிவரை. ஆனால் நாயகனுக்கு மட்டும் வாந்தி எடுப்பதுவரை நீட்டித்து சித்தரிப்பு இருக்கும். குடித்துவிட்டு வாந்தி எடுப்பதையும் இந்தப் படத்தில் மணிகண்டன் என்கிற So called middle class நாயகனின் தலையில் தூக்கி வைத்துவிட்டார்கள்.

இப்படியாக அவரின் பழக்க வழக்கம் அத்தனைக்கும் ஒரு அருவருப்பை அவரது வர்க்கப் பின்னணியோடு சேர்த்து அமைத்திருப்பார்கள். இந்த மாதிரியான ஒரு சார்பான Stereotype விஷயங்கள் இந்தப் படத்தை விமர்சிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

படத்தில் வந்திருக்கும் உருவகங்கள் எல்லாம் ரசிக்கும்படி இருந்தன. நாயகியின் நண்பர்களுடன் மணிகண்டன் ட்ரெக்கிங் செல்லும்போது, அவர்கள் மலையை இயல்பாக ஏறுவார்கள், நாயகனுக்கு அவர்களின் பாதை சிரமமாக இருக்கும். அது அவர்கள் வாழ்க்கைச் சூழலில் இருக்கும் பாரதூரமான முரணை மட்டும் காட்டாமல், மூர்க்கமாக இருக்கும் மணிகண்டனுக்கு Move On எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நாயகி மலைமேல் சென்ற பிறகு மணிகண்டனாய் கீழிருந்து வந்து கொண்டிருப்பார். அவள் அவனைத் தாண்டி சென்றுவிட்டாள் என்பதை விளக்கி இருந்தது. இறுதியாக மணிகண்டன் அந்த பெண்ணை விட்டு போகணும் என நினைக்கும் இடத்திற்கு பார்வையாளர்களை நகர்த்தியது இயக்குனர் பிரபுராம் வியாசின் மேக்கிங் கை கொடுத்து இருக்கிறது.

Lover movie

இறுதியில் மணிகண்டன் எடுக்கும் முடிவுக்கு தியேட்டரில் விசில் சப்தங்களை கேட்க முடிந்தது. ஒரு காதல் பிரிவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது இந்த படத்தின் சிறப்பு. கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகத்தில் காதலின் பிரிதல் பற்றி மட்டும் இந்தப் படம் பேசியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஒருபுறம் அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற திரைப்படங்கள் சாகசவாதமாக காட்டும் விஷயங்களின் கோரத்தன்மை எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று காட்டியிருக்கும். மோசமான அணுகுமுறைகளை குளோரிபை செய்யும் சினிமாக்கள் கொட்டிக்கிடக்கும் வேளையில் இப்படியான ஒரு சினிமா வரவேற்கத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சில பொதுமைப்படுத்தும் விஷயங்களை தவிர்த்து இருந்தால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஏனெனில், சமூகங்களில் ஒரு பொதுபுத்தியை உருவாக்குவதில் கலைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால், ஒரு கலைப்படைப்பை அதுவும் சமூகத்தின் முக்கியமான பிரச்னையை கையில் எடுத்துள்ள இயக்குநர்கள் இதுபோன்ற சிக்கலையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.