lokesh - kamal - rajini web
சினிமா

”கமலுக்கும் ரஜினிக்கும் இதுதான் வித்தியாசம்..” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சுவாரசியம்!

தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரையும் இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இரண்டு துருவ நடிகர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Rishan Vengai

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவிற்கே புதிய விசயமாக அவர் கொண்டுவந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனது, இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

விக்ரம் படம்

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) என்பதை வெறும் பேச்சோடு நிறுத்திவிடமால், கைதி, விக்ரம் மற்றும் லியோ என மூன்று திரைப்படங்களையும் அவருடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்குள் இணைத்து கொண்டுவந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், அவருடைய அடுத்த படமான ‘கூலி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவருகிறார்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ்

ரஜினி, கமல் என இரண்டு மிகப்பெரிய நடிகர்களை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், உட்ச நட்சத்திரங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன?

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரஜினி மற்றும் கலம் இருவருக்குமான வித்தியாசம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், “ரஜினி சார் ஒரு இயக்குநரின் நடிகர். அவர் திரையில் கொண்டுவரும் அந்த மேஜிக்கானது ஆஃப்-ஸ்கிரீன் மற்றும் ஆன்-ஸ்கிரீன் இரண்டு தளங்களிலும் எந்த வித்தியாசமும் இருக்காது. அடுத்து நடிக்கவேண்டிய காட்சி மற்றும் செயல்முறை பற்றி அவர் தொடர்ந்து சிந்தித்துகொண்டே இருப்பார். மற்ற நடிகர்கள் என்ன நடிக்கப்போகிறார்கள், அதற்கு தகுந்தார் போல நாம் என்ன செய்யவேண்டும் என்று பார்த்துகொண்டே இருப்பார். இயக்குநரின் எந்த ஆலோசனைக்கும் அவர் நோ சொல்லமாட்டார்.

கமல்ஹாசன் சார் என்று வரும்போது இது முற்றிலும் மாறுபட்ட நபராக இருக்கிறார். முதலில் அவர் ஒரு நடிகரை என்பதை தாண்டி தன்னை ஒரு டெக்னீஷியன் என்று தான் உணர்கிறேன் என்று அவரே சொல்வார். எனவே, ஒரு காட்சியைப் பற்றி ஒரு தொழில்நுட்ப நிபுணரிடம் பேசுவதற்கும், ஒரு நடிகரிடம் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இப்போது நீங்கள் காண்கிறீர்கள். எனவே, அவர்கள் இருவருக்கும் இடையே நான் கண்ட வித்தியாசம் இதுதான். நடிப்பு என்று வரும்போது. அது எப்படி உணர்கிறது என்பதை என்னால் விளக்க முடியாது. நீங்கள் அதை அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் ஆக்சன் கட் என்று சொல்லும்போது, இந்த இரண்டு லெஜண்ட்களும் நடிகர் என்பதை தாண்டி கேரக்டராகவே மாறிவிடுவார்கள்” என்று பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.