சினிமா

குஷியில் கன்னட திரையுலகம்.. 2022ல் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை தொட்ட 5 படங்கள்!

குஷியில் கன்னட திரையுலகம்.. 2022ல் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை தொட்ட 5 படங்கள்!

சங்கீதா

நடப்பாண்டில் வெளியான 5 கன்னடப் படங்கள், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தென்னிந்திய திரையுலகை வியக்க வைத்துள்ளது.

தென்னிந்தியாவிலேயே சில நல்ல படங்கள் கன்னட திரையுலகில் இருந்து வந்தாலும், பெரும்பாலான படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. மேலும் மிக குறைந்த அளவிலான பட்ஜெட்களிலேயே கன்னடப் படங்கள் உருவாகி வந்தன. பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காதநிலையில் இருந்த கன்னட திரையுலகை, ‘கே.ஜி.எஃப்’ படம் மொத்தமாக திருப்பிப்போட்டது என்றே சொல்லலாம்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ்ஷின் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகம், கன்னட உலகை தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டும் வியந்து பார்த்தது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கோலார் தங்க வயலில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மேலும் முதல் பாகம் 250 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது.

அவ்வாறு வெளிவந்த இந்தப் படம், ரசிகர்களிடையே அமோக வரவேற்புப் பெற்றது. ஏன் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தால், ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் கூட கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சில படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.

1. கே.ஜி.எஃப்.: சாப்டர் 2 (ஏப்ரல் 2022)

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், 1250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. கன்னட திரையுலகில் ஒரு படம் இவ்வளவு வசூலித்தது இதுவே முதல்முறை. இந்தப் படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், மாளவிகா, ரவீணா தாண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது.

2. விக்ராந்த் ரோணா (ஜூலை 2022)

இந்தப் படமும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. பான் இந்தியா படமாக உருவான இந்தப் படத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்ணான்டஸ், நிரூப் பந்தாரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தன். சுமார் 210 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்து, கன்னடத்தில் வெளியானப் படங்களில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் ‘கே.ஜி.எஃப்.’ 1 மற்றும் 2-ம் பாகத்தை தொடர்ந்து 3-ம் இடம் பிடித்துள்ளது.

3. ஜேம்ஸ் (மார்ச் 2022)

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் நடிப்பில், 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லராக உருவான ‘ஜேம்ஸ்’ படம், 151 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

4. காந்தாரா (செப்டம்பர் 2022)

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது டப் செய்யப்பட்டு கடந்த 14-ம் தேதி பாலிவுட்டிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 15-ம் தேதியும் வெளியானது. வருகிற 20-ம் தேதி மலையாளத்திலும் வெளியாகிறது. கன்னடம் தாண்டி இந்தப் படம் மற்ற மொழிகளிலும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், 142 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. தற்போதும் வரவேற்பு இருப்பதால் இந்தப் படம் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. 777 சார்லி (ஜூன் 2022)

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 105 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ரக்ஷித் ஷெட்டி நடிப்பில், கிரண்ராஜ் இயக்கத்தில் இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது.