சினிமா

நேரம் மீண்டும் வராது; அமைதியாக கடந்து செல்வோம் - ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

நேரம் மீண்டும் வராது; அமைதியாக கடந்து செல்வோம் - ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

webteam

ரேடியோ நேரலையில் பேசிய ரகுமான், நான் நல்ல படங்களுக்கு நோ சொல்வதே இல்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய கூட்டமே எனக்கு எதிராக வதந்தியை பரப்பி வருகிறது. என்னிடம் இசையமைக்க கேட்டு செல்ல வேண்டாமென பலர் கூறியதாக முகேஷ் சாப்ரா என்னிடம் கூறினார்.

அப்போது தான் நான் ஏன் குறைவான இந்தி படங்களுக்கு இசையமைக்கிறேன் என எனக்கே தெரிந்தது. நல்ல படங்கள் என்னை ஏன் தேடி வரவில்லை என புரிந்தது. ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்கிறது. நான் எதாவது செய்ய வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டம் வேலை செய்கிறது. பரவாயில்லை. எனக்கு விதியின் மேல் நம்பிக்கை உள்ளது. எல்லாம் கடவுளின் செயல் என நம்புகிறேன். நான் அனைவரையுமே வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.

பாலிவுட் திரையுலகம் குறித்த ரகுமானின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்த் இறப்பின் போதே பாலிவுட் மீது பெரும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் ரகுமானின் இந்த குற்றச்சாட்டு மேலும் பேசப்பட்டது. இந்நிலையில் ரகுமானின் கருத்து குறித்து பதிவிட்ட இயக்குநர் ஷேகர் கபூர்,

உங்கள் பிரச்னை என்ன தெரியுமா ரகுமான்? நீங்கள் ஆஸ்கருக்கு பின் பாலிவுட் பக்கம் வராமல் முடித்துக் கொண்டீர்கள். இதிலிருந்து நீங்கள் பாலிவுட்டை காட்டிலிலும் திறம்பட செயல்படும் திறமை கொண்டவர்கள் என்பது நிரூபணம் ஆகிறது எனக் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள ரகுமான், ''இழந்த பணம் மீண்டும் வரும். இழந்த புகழ் மீண்டும் வரும். ஆனால் நம் வாழ்வின் முக்கியமான நேரம் மீண்டும் வராது. அமைதியாக கடந்து செல்வோம். நாம் செய்ய நிறைய இருக்கிறது ''எனத் தெரிவித்துள்ளார்