vijay file image
சினிமா

"ஆயிரக்கணக்கான மக்கள் உதவியின்றி அவதிப்படுகிறார்கள்.. கைகோர்ப்போம் துயர்துடைப்போம்" - விஜய் அழைப்பு!

மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை மக்கள் மீளாத நிலையில், அரசோடு இணைந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் ட்வீட் செய்துள்ளார். மக்கள் அவதிப்படுவதாகவும் விமர்சனம் வைக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்

யுவபுருஷ்

மிக்ஜாம் புயல் நேற்று கரையை கடந்து சென்ற நிலையில், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என்ற பலரதரப்பினரும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகளை சேர்ந்தவர்களும் மீட்புப்பணி பக்கம் தலைகாட்டி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், பாதிப்பு மற்றும் மீட்ப்புப்பணி குறித்து நடிகர் விஐய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “கைகோர்ப்போம், துயர்துடைப்போம்” என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக தலைவர்களின் நினைவுநாட்கள், பிறந்தநாட்களில் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது, மரியாதை செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் விஜய் ஈடுபட்டு வரும் நிலையில், மிக்ஜாம் புயல் விவகாரத்திலும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மக்களுக்கு ஆதரவாக இந்த பதிவு இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் விஜய் கருத்தை முன்வைத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.