சினிமா

”அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”.. லியோ அப்டேட்டும்.. GVM கலகல பதிலும்!

இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

PT WEB

இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ’லியோ’ படம் குறித்து இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் அடுத்தது சென்னையில்தான் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முக்கியமான ஒரு கேள்விக்கு மிகவும் கலகலப்பான பதில் ஒன்றினை அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது கவுதம் மேனன் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் சூழ்ந்த கூட்டத்தின் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கிருந்த இளைஞர் பட்டாளம் லியோ பட அப்டேட் கேட்டு பெரிய அளவில் ஆரவாரமிட்டனர். அப்போதுதான் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த ரசிகர்களின் கேள்வியை மிகவும் சாதுர்யமாக கௌதம் எதிர்கொண்டுள்ளார்,

அந்த வீடியோவில் “என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கண்டிப்பு மிக்கவர். அவர் என்னிடம் ‘சார், படத்தோட அப்டேட் பற்றி கேட்பார்கள்; படத்தைப் பற்றி எதையும் சொல்லிவிடாதீர்கள். ஒருவேளை, அவர்கள் கட்டாயப்படுத்திக் கேட்டால் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கார்.. உண்மையில் படப்பிடிப்பு நன்றாகவே இருந்தது” என்றார் கலகலப்பாக.

அத்துடன், ”நடிகர் விஜய் உடன் பணியாற்றியது மிகவும் அற்புதமானதாக இருந்தது” என்றும் அவர் கூறினார்.