ரோகிணி திரையரங்கம் புதிய தலைமுறை
சினிமா

"தியேட்டரில் லியோ திரையிடப்படாது...!" ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தியேட்டர்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியாகாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவபுருஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமலேயே உள்ளது.

தயாரிப்பாளர் தரப்புக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பங்கீட்டில் சரியான முடிவு எட்டப்படாததால் இந்த நிலை நீடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் முக்கிய திரையரங்கமாக இருக்கும் ரோகிணியிலும் டிக்கெட்டிற்காக நேற்று காலை முதல் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், முன்பதிவு குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இங்கு டிக்கெட் கிடைக்காது என்று திரையரங்க நிர்வாகம் நேற்று போஸ்டர் ஒட்டியது. இந்நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

எப்படியும் இன்று டிக்கெட் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், “லியோ இங்கு திரையிடப்படவில்லை” என்ற போஸ்டரை டிக்கெட் கவுண்டர் முன்பு வைத்துள்ளது ரோகிணி தியேட்டர் நிர்வாகம். இதனால், 2 நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.